அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அனைவருக்கும் கட்டாய இடமாறுதல் பள்ளிக்கல்வி துறை பட்டியல் வெளியீடு

அரசு பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் அனைவரும் பணிநிரவல் மூலம் கட்டாய இடமாறுதல் செய்யப்பட உள்ளனர். இதற்கான பட்டியலை பள்ளிக்கல்வி துறை அரசுக்கு தெரிவித்து இருக்கிறது.
அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் அனைவருக்கும் கட்டாய இடமாறுதல் பள்ளிக்கல்வி துறை பட்டியல் வெளியீடு
Published on

சென்னை,

தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் அரசு, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பொது இட மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கல்வித்துறை அறிவித்து இருந்தது.

அதன்படி, கடந்த 21-ந் தேதி முதல் பொது இட மாறுதல், பணி நிரவல், பதவி உயர்வு ஆகியவற்றுக்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர். வருகிற 28-ந்தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டு இருக்கிறது.

தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் (ஜூலை) 8-ந் தேதி தொடங்குகிறது.

இந்தநிலையில் பணி இடமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னர், ஒவ்வொரு ஆண்டு தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி துறையின் கீழ் உள்ள பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்படுவது வழக்கம். அந்த ஆசிரியர்கள் ஏற்கனவே பணிபுரியும் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பணிநிரவல் மூலம் கட்டாய இடமாறுதல் செய்யப்படுவார்கள்.

அந்தவகையில் நடப்பாண்டில் பள்ளிகளில் உபரியாக இருக்கும் ஆசிரியர்களின் பட்டியலை கல்வித்துறை தயார் செய்து இருக்கிறது. அதன்படி, தொடக்கக் கல்வியின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் 2 ஆயிரத்து 279 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர், அரசுக்கு தெரிவித்து இருக்கிறார்.

அதேபோல், பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் 17 ஆயிரத்து 147 ஆசிரியர்கள் உபரியாக இருக்கின்றனர் என்ற அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்து இருக்கிறார்.

தொடக்கக் கல்வி, பள்ளிக்கல்வி இரண்டையும் சேர்த்து மொத்தம் 19 ஆயிரத்து 426 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பட்டியல் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த பட்டியலுக்குள் வரும் ஆசிரியர்கள், அந்தந்த கல்வி மாவட்டத்தில் காலியாக உள்ள பிற இடங்களில் பணிநிரவல் மூலம் கட்டாய இடமாறுதலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒவ்வொரு ஆண்டும் இது நடைமுறையில் இருப்பது தான். அது ஆசிரியர்களுக்கே நன்றாக தெரியும் என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com