குரூப்-2 வினாத்தாளில் பெரியாரின் பெயர் தவறாக குறிப்பிட்ட விவகாரம்: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

குரூப்-2 தேர்வு வினாத்தாளில் பெரியாரின் பெயர் தவறாக குறிப்பிட்ட விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
குரூப்-2 வினாத்தாளில் பெரியாரின் பெயர் தவறாக குறிப்பிட்ட விவகாரம்: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
Published on

சென்னை,

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) 1,199 ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப்-2 தேர்வை நேற்று முன்தினம் நடத்தியது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் 6 லட்சம் பேர் எழுதினார்கள். இந்த தேர்வில் 162-வது கேள்வியாக, திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார்? என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது. இந்த கேள்விக்கு தேர்வு செய்யும் வகையில் 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன.

அதில் முதல் விடை தவறுதலாக இ.வெ.ராமசாமி நாயக்கர் என்று கொடுக்கப்பட்டிருந்தது. ஈ.வெ.ராமசாமி என்பதற்கு பதிலாக பெரியாரின் சாதி பெயரும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்தநிலையில் டி.என்.பி.எஸ்.சி இந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி க.நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த குரூப்-2 தேர்வுக்கான வினாத்தாளில் தந்தை பெரியாரின் பெயர் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என செய்திகள் வெளிவந்துள்ளன. தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு வினாத்தாள் தயாரிக்கும் பணியினை அனுபவம் மிக்க பல்வேறு பேராசிரியர்கள் செய்கின்றனர். மேலும், வினாக்கள் பல நிலைகளில் வேறு சில பேராசிரியர்களால் சரிபார்க்கப்பட்டு இறுதி செய்யப்படுகிறது.

இதே நடைமுறை தான் 70 ஆண்டுகளுக்கும் மேலாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மிகுந்த கவனத்துடன் தயாரிக்கப்பட்டும், தந்தை பெரியாரின் பெயர் தவறாக குரூப்-2 வினாத்தாளில் குறிப்பிடப்பட்டதற்கு தேர்வாணையம் தனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறது. இந்த தவறுக்கு காரணமான நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதுடன், இனிவருங்காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாத வண்ணம் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com