கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

எடியூரப்பா ராஜினாமா செய்ததன் மூலம் கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து
Published on

சென்னை,

புதுச்சேரியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது. கர்நாடகத்தில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது. எனவே, தனது பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் எடியூரப்பா ராஜினாமா செய்வதாக வெளிப்படையாக அறிவித்து இருக்கிறார். அதேநேரத்தில், மதச்சார்பற்ற அணியாக காங்கிரஸ் கட்சியும், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் ஒருங்கிணைந்து இருப்பது வரவேற்கத்தக்கது. மதச்சார்பற்ற அணிகள் இணைய வேண்டும் என்பது எல்லோருடைய விருப்பமாகவும் உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் அது நிறைவேற்றப்பட்டு இருப்பது உள்ளபடியே மகிழ்ச்சிக்குரியது. தி.மு.க. சார்பில் அதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ள கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சிக்கும், குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதே கருத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

ராகுல்காந்தியின் ராஜதந்திர மற்றும் மதிநுட்ப நடவடிக்கையாலும், உச்சநீதிமன்றத்தின் நியாயமான தலையீடு மற்றும் தீர்ப்பாலும் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் மத்திய அரசின் ஜனநாயக படுகொலைக்கு உட்படுத்தப்பட்டிருந்த இந்திய ஜனநாயகத்தின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. கர்நாடக சட்டமன்றத்தில் நீதியும், ஜனநாயகமும் வென்றுள்ளது. உச்சநீதிமன்றம் தன் தனித்தன்மையையும், பெருமையையும் காப்பாற்றி மக்களிடம் மீண்டும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் உரியவர்கள்.

மத்திய அரசின் கைப்பாவைகளாக செயல்படும் கவர்னர்களுக்கு சரியான பாடம்படிப்பினை இது. ஜனநாயகமும், சட்டமும், தர்மமும் வென்றது மகிழ்ச்சிக்குரியது. ராகுல்காந்திக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு, கர்நாடக மாநிலத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பதற்குப் போதுமான எண்ணிக்கை இல்லாத நிலையில் கவர்னரின் துணையோடு சட்ட விரோத முறையில் ஆட்சிக்கு வர முயன்ற பா.ஜ.க.வின் முயற்சி தோற்கடிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஜனநாயகம் வெற்றிப் பெற்றிருப்பதை விடுதலை சிறுத்தைகள் கட்சி மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. பா.ஜ.க.வுக்கு கர்நாடகாவில் பாடம் கற்பிக்கப்பட்டுள்ளது.

எடியூரப்பா முதல்-மந்திரியாக ஆனதும் விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். புதிதாகப் பதவி ஏற்க உள்ள குமாரசாமி அரசு அதையே தனது முதல் உத்தரவாக அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரை காத்திருக்காமல் தமிழகத்துக்கு உரிய தண்ணீரை திறந்துவிட்டு தென்மாநில மக்களுக்கு இடையே சுமூகமான உறவை ஏற்படுத்த குமாரசாமி முன்வர வேண்டும். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் மதச்சார்பற்ற கட்சிகளுக்கு கிடைத்த வெற்றி இனிவரும் தேர்தல்களிலும் தொடர அனைத்து மதச்சார்பற்ற கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒரு அணியில் செயல்பட உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com