கத்திரி வெயில் தொடங்கியது அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

கத்திரி வெயில் தொடங்கியது அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி
கத்திரி வெயில் தொடங்கியது அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி
Published on

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. சாலையில் அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. கடும் வெயில் காரணமாக பகலில் வெளியே தலைகாட்டவே மக்கள் பயந்தனர். சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அனல் காற்றால் நொந்து போனார்கள். தகிக்கும் வெயிலால் தவித்து போன மக்களுக்கு கோடை மழை கானல் நீராகவே போய்விட்டது. பானி புயலும் திசை மாறி தமிழகத்தை ஏமாற்றிவிட்டது.

இந்த நிலையில் சித்திரை மாதத்தில் முத்திரை பதிக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் தமிழகத்தில் நேற்று தொடங்கியது. கோடை வெயிலை காட்டிலும் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் என்பதால் கத்திரி வெயிலுக்கு மக்கள் பயந்து கிடந்தார்கள்.

எனினும் கத்திரி வெயில் காலத்தின் முதல்நாளான நேற்று வெயில் அவ்வளவு ஆக்ரோஷம் காட்டவில்லை என்றாலும், அனல் காற்று வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

சாலையில் செல்வோரில் பெரும்பாலானோர் குடைபிடித்தபடி செல்வதை பார்க்க முடிந்தது. இளம்பெண்கள் துப்பட்டாவை சுற்றியும், ஆண்கள் கைக்குட்டை கொண்டு முகத்தை மறைத்தபடியும் வாகனம் ஓட்டி சென்றனர். கத்திரி வெயிலுக்கு பயந்து மக்கள் பெரும்பாலும் வீடுகளுக்குள்ளேயே முடங்கினர்.

இதுகுறித்து வானிலை அதிகாரிகள் கூறுகையில், கத்திரி வெயிலை முன்னிட்டு இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) அனல்காற்று வீசும். அதேவேளை வெப்பமும் அதிகரித்து காணப்படும். வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மழை வாய்ப்பு உண்டு, என்றனர்.

தமிழகத்தில் நேற்றைய வெயில் நிலவரப்படி திருத்தணியில் அதிகபட்சமாக 111.2 டிகிரி வெயில் கொளுத்தியது. இதுதவிர சென்னை, மதுரை, கடலூர், தர்மபுரி, கரூர், நாகை, பாளையங்கோட்டை, சேலம், திருச்சி, வேலூர் ஆகிய நகரங்களிலும் வெயில் 100 டிகிரிக்கு மேல் தாண்டி அனல் அடித்தது.

கத்திரி வெயிலின் தாக்கத்தால் பகல் முழுவதும் வீடுகளுக்குள்ளே முடங்கிய மக்கள் மாலையில் கடற்கரை, பூங்கா போன்ற சுற்றுலா தலங்களில் சென்று இளைப்பாறினர். இதனால் மேற்படி சுற்றுலா இடங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சென்னையில் நேற்று மாலையில் மெரினா கடற்கரை மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நேற்றைய வெயில் நிலவரம் வருமாறு:-

சென்னை நுங்கம்பாக்கம் - 101.84 டிகிரி

சென்னை மீனம்பாக்கம் - 103.28 டிகிரி

கோவை - 96.08 டிகிரி

ஊட்டி - 78.44 டிகிரி

கடலூர் -100.76 டிகிரி

தர்மபுரி - 100.4 டிகிரி

கன்னியாகுமரி - 96.08 டிகிரி

கரூர் - 104.36 டிகிரி

கொடைக்கானல் - 71.96 டிகிரி

மதுரை - 106.16 டிகிரி

நாகை - 102.38 டிகிரி

நாமக்கல் - 99.5 டிகிரி

பாளையங்கோட்டை - 102.92 டிகிரி

சேலம் - 100.76 டிகிரி

தஞ்சை - 95 டிகிரி

திருச்சி - 105.98 டிகிரி

திருத்தணி - 111.2 டிகிரி

தூத்துக்குடி - 91.4 டிகிரி

வால்பாறை - 80.6 டிகிரி

வேலூர் - 109.76 டிகிரி

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com