காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 4 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

காயல்பட்டினத்தில் ஒரே நாளில் 4 கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
Published on

ஆறுமுகநேரி:

காயல்பட்டினத்தில் ஒரேநாள் இரவில் மர்மநபர்கள் 4 கடைகளை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்றனர். அந்த மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

செல்போன் கடையில் திருட்டு

காயல்பட்டினம் பெரிய நெசவுத்தெரு தாயும்பள்ளிவாசல் பின்புறமுள்ள காம்ப்ளக்ஸில் துணிக்கடை, செல்போன் கடை, டைல்ஸ் பார்க், மற்றும் மாட்டு இறைச்சி கடை ஆகியவை அடுத்தடுத்து உள்ளன. இங்கு செல்போன் கடை நடத்தி வருபவர் சைபுதீன் (வயது 59). இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் கடையை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலையில் கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், கடையின் உள்ளே சென்று பார்த்த போது விலை உயர்ந்த 5 ஸ்மார்டு போன்கள், ப்ளூடூத் சாதனங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் திருடப்பட்டு இருந்தன. இந்த பொருட்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.

அடுத்தடுத்து கைவரிசை

இந்த கடைக்கு அடுத்து உள்ள ஷேகு என்பவருக்கு சொந்தமான டைல்ஸ் கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. அந்த கடையில் செல்போன் திருடப்பட்டது. அந்த கடையை அடுத்துள்ள துணிக்கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அந்த கடையில் பொருட்கள் திருடு போகவில்லை.

மேலும், காயல்பட்டினம் ஓடக்கரைக்கு முன்புறமுள்ள மகபூப்சுப்ஹானிக்கு சொந்தமான இருசக்கர வாகன ஒர்க் ஷாப்பும், உதரி பாகங்கள் விற்பனை கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இந்தகடையில் இருந்த ரூ.30 ஆயிரம் திருடப்பட்டது. அதேநாளில் பெரிய நெசவு தெருவில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளும் திருடப்பட்டு இருந்தது.

ஒரேநாள் இரவில் மர்மநபர்கள் துணிகரமாக கடைகளில் பூட்டை உடைத்து பணம், பொருட்களை திருடி சென்ற சம்பவம் காயல்பட்டினத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இது தொடர்பாக கடைகளின் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார். மேலும், தூத்துக்குடியிலிருந்து கைரேகை நிபுணர் திருமுருகன் திருட்டு சம்பவம் நடந்த கடைகளில் பதிவான மர்மநபர்களின் ரேகைகளை பதிவு செய்து சோதனை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com