கோடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க அ.தி.மு.க. தயார் செம்மலை எம்.எல்.ஏ. பேட்டி

‘கோடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை வந்தால் அதை சந்திக்க அ.தி.மு.க. தயாராக இருக்கிறது’ என செம்மலை எம்.எல்.ஏ. கூறினார்.
கோடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை சந்திக்க அ.தி.மு.க. தயார் செம்மலை எம்.எல்.ஏ. பேட்டி
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூரில் முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான செம்மலை எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தெகல்கா பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் என்பவர், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பற்றி ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

தெகல்கா முன்னாள் ஆசிரியருக்கு கேரளாவை சேர்ந்த சயன் மற்றும் அவருடைய கூட்டாளிகளுடன் எப்படி தொடர்பு ஏற்பட்டது?. சயனும், அவரது கூட்டாளிகளும் கொலை, கொள்ளை போன்ற கொடுங் குற்றசெயல்களில் ஈடுபட்டு தற்போது நீதிமன்றத்தில் அதன் வழக்குகளை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள்.

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திட்டமிட்டு சதி செய்து பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்புகிறார்கள். சயன் தன்னுடைய பேட்டியில், ஜெயலலிதா மருத்துவமனையில் உயிருடன் இருந்தபோதே, கோடநாடு எஸ்டேட்டில் ஓட்டுனராக இருந்த கனகராஜ் தங்களது உதவியை நாடியதாக கூறியுள்ளார். அப்படி இருக்கும்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எப்படி தொடர்பு படுத்த முடியும்.

தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவும், தி.மு.க. வக்கீலும் பேட்டி கொடுத்திருக்கிறார்கள். இதன் உள்நோக்கம் என்ன? இவர்களுக்கும், கேரள குற்றவாளிகளுக்கும் என்ன தொடர்பு உள்ளது?. இவர்கள் இந்த செய்தியை வெளியிடுவதன் மூலம் ஏதோ பின்னணி இருக்கின்றது என்பது தெளிவாக தெரிகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் தி.மு.க. சதி செய்து வருகிறது. ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடப்பதை இவர்களால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு சதி செய்கிறார்கள். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக முதல்-அமைச்சர் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள். இதை மக்கள் நம்பமாட்டார்கள். அவதூறு பரப்புபவர்கள் மீதும், அதனை ஒளிபரப்புபவர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குற்றவாளிகளின் வாக்குமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. கோடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ.யிடம் வழக்கை ஒப்படைத்தால் விசாரணையை சந்திக்க தயார். இவ்வாறு செம்மலை கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com