

செங்குன்றம்,
சென்னையை அடுத்த மாதவரம் மகாவீர் நகர் 6-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் பாபு(வயது 48). தொழில் அதிபரான இவர், சொந்தமாக லாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரங்களை வைத்து தொழில் செய்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த இவருடைய நண்பர் சிவா(45). இவர், மாதவரம்-பாடி 200 அடி சாலையில் சாஸ்திரிநகர் அருகே சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு நண்பர்கள் இருவரும் பெட்ரோல் பங்க் வாசலில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது மாதவரம் வஜ்ரவேல் நகர் 2-வது தெருவைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரான சுரேந்தர்(36) என்பவர் தனது மனைவி சிவகாமியுடன் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் போட அங்கு வந்தார்.
அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பெட்ரோல் போட்டு விட்டு, தனது மனைவியை அவர் மோட்டார் சைக்கிளில் ஏற்ற முடியாமல் தடுமாறினார். இதை பார்த்த பாபு, எதற்காக குடிபோதையில் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் செல்கிறீர்கள்? என தட்டிக்கேட்டார். இதனால் சுரேந்தருக்கும், பாபுவுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. பாபுவுக்கு ஆதரவாக சிவா பேசியதால் வாக்குவாதம் முற்றியது. பின்னர் சிவகாமி, தனது கணவரை சமாதானம் செய்து, அங்கிருந்து அழைத்துச் சென்று விட்டார்.
மனைவியை வீட்டில் இறக்கி விட்ட சுரேந்தர், அங்கு மது அருந்தி கொண்டிருந்த தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த ஐதர்அலி(21), ஜோதீஸ்வரன்(23), அசோக் (20), கார்த்திக்(22) ஆகியோரிடம் பெட்ரோல் பங்கில் இருந்த 2 பேர் தனது மனைவியை கிண்டல் செய்ததாக கூறினார்.
இதையடுத்து சுரேந்தர் உள்பட நண்பர்கள் 5 பேரும் பெட்ரோல் பங்குக்கு சென்று பாபு, சிவா இருவரிடமும் தட்டிக்கேட்டனர். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றி, கைகலப்பாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
அப்போது ஜோதீஸ்வரன், தன்னிடம் இருந்த மோட்டார் சைக்கிள் சாவியால் பாபுவின் வலது காதில் குத்தினார். பின்னர் அருகில் இருந்த பொதுமக்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து கலைந்து போக செய்தனர்.
பின்னர் வீட்டுக்கு சென்று தூங்கிய பாபு, மறுநாள் காலையில் எழுந்தபோது காது வலியால் துடித்தார். இதுபற்றி தனது மனைவி உமாமகேஸ்வரியிடம் கூறினார். அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவரை அழைத்துச்சென்றார்.
டாக்டர்கள் பரிசோதித்து பார்த்ததில் பாபுவின் காதில் சாவியால் குத்தியதில் மூளையில் ரத்தம் கட்டி இருப்பதாகவும், இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர். அதற்கான ஏற்பாடுகளை டாக்டர்கள் செய்து வந்தனர். ஆனால் அதற்குள் நேற்று காலை தொழில் அதிபர் பாபு, பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி மாதவரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வக்குமார் வழக்குப்பதிவு செய்து ஐதர்அலி, ஜோதீஸ்வரன், அசோக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் திருவொற்றியூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கார்த்திக், சுரேந்தர் இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.