மதுரையில் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை விஷம் குடித்து தற்கொலை

சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
மதுரையில் பெற்ற மகளையே கர்ப்பமாக்கிய தந்தை விஷம் குடித்து தற்கொலை.
தந்தை தற்கொலை
Published on: 

மதுரை,

மதுரையில் தனது 15 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு, அவரை 6 மாத கர்ப்பமாக்கிய தந்தை, காவல் நிலைய விசாரணையின்போது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வயிற்று வலி

மதுரை மாநகரப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மாணவி கர்ப்பம்

அங்கு சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் 6 மாத கர்ப்பமாக இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக இது குறித்து குழந்தைகள் நலக் குழுவிற்கும், போலீசாருக்கும் மருத்துவர்கள் தகவல் கொடுத்தனர்.

போலீஸ் விசாரணை

இந்த புகாரின் பேரில், மதுரை தெற்கு வெளிவீதி பகுதியில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். பாதிக்கப்பட்ட சிறுமியிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவரது சொந்த தந்தையே குடிபோதையில் அவரிடம் தொடர்ந்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியது வெளிச்சத்திற்கு வந்தது.

விசாரணையின் போது தற்கொலை

இதனைத் தொடர்ந்து, கடந்த புதன்கிழமை மாலை போலீசார் சிறுமியின் பெற்றோரை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது, காவல் நிலையத்திற்குள் போலீசாரின் விசாரணை நடந்து கொண்டிருந்தது. அப்போது மாணவியின் தந்தை திடீரென மயங்கி கீழே விழுந்தார்.

உடனடியாக அவரை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக அரசு இராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். போலீஸ் விசாரணைக்கு பயந்து, அவர் காவல் நிலையத்திற்கு வரும் முன்பே மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு வந்தது தெரியவந்தது.

காவல் நிலையத்திற்குள் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அவர் குழந்தைகள் நலக் குழுவின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com