மனோராவில், ரூ.33 லட்சத்தில் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி

மனோராவில், ரூ.33 லட்சத்தில் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி
மனோராவில், ரூ.33 லட்சத்தில் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி
Published on

சேதுபாவாசத்திரம்

சேதுபாவாசத்திரம் அருகே உள்ள மனோராவில் ரூ 33 லட்சத்தில் சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி நடந்து வருவதை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார்.

சுற்றுலா தளம்

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டிணத்தில் மனோரா சுற்றுலா தளம் அமைந்துள்ளது. கி.பி.814-ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த மாவீரன் நெப்போலியனை ஆங்கிலேயர்கள் வாட்டர்லு என்ற இடத்தில் தோற்கடித்ததன் நினைவாக ஆங்கிலேயரின் நண்பன் மராட்டிய மன்னன் இரண்டாம் சரபோஜி வெற்றியின் நினைவு சின்னமாக கட்டப்பட்டதுதான் மனோரா.

பேராவூரணி-பட்டுக்கோட்டை போன்ற பெரிய நகர பகுதிகளின் மைய பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையோரம் மனோரா அமைந்துள்ளது. சென்னை முதல் கன்னியாகுமரிவரை உள்ளவர்களும், வெளிநாட்டினரும் இங்கு வந்து சுற்றுலா தளமான மனோராவை கண்டுகளித்து சென்றனர்.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

நாளடைவில் சுற்றுலா தளமான மனோரா மிகவும் சேதம் அடைந்தது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளாக இங்கு மராமத்து பணிகள் நடந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பணிகள் நிறைவடைந்தன.

அன்று முதல் கொரோனா ஊரடங்கால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வுக்கு பின்னர் கடந்த இரண்டு மாதங்களாக மனோராவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

சிறுவர் பூங்கா புதுப்பிக்கும் பணி

மனோராவுக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்காக சிறுவர்களுக்கென்று பூங்கா அமைக்கப்பட்டு செயல்பட்டு வந்தது. இந்த சிறுவர் பூங்காவும் நாளடைவில் மிகவும் மோசமான நிலையில் சேதமடைந்தது.

இதனைத்தொடர்ந்து அந்த சிறுவர் பூங்கா ரூ.33 லட்சம் மதிப்பீட்டில் புதுப்பிக்கும் பணி நடந்து வந்தது. இந்த பணிகள் அனைத்தும் நிறைவடையும் தருவாயில் உள்ளது.

கலெக்டர் ஆய்வு

இந்த நிலயில் தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் புதுப்பிக்கப்பட்ட சிறுவர் பூங்காவை நேரில் சென்று ஆய்வு செய்தார். அத்துடன் ரூ.49.30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும் சுற்றுலா பயணிகளுக்கான படகு நிறுத்தும் இடம், ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பயிற்சி மையம் ஆகியவற்றையும் ஆய்வு செய்தார்.

மேலும் மனோராவில், வனத்துறை சார்பில் மாங்குரோவ் மரக்கன்றுகளையும் நட்டார்.

இந்த ஆய்வின்போது ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, சடையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com