மயிலாடுதுறையில், மின்மாற்றி பழுது நீக்கும் மையம் அமைக்க வேண்டும்

காலதாமதத்தால் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்கிறது இதனால் மயிலாடுதுறையில் மின்மாற்றி பழுது நீக்கும் மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.
மயிலாடுதுறையில், மின்மாற்றி பழுது நீக்கும் மையம் அமைக்க வேண்டும்
Published on

காலதாமதத்தால் தண்ணீர் இன்றி பயிர்கள் காய்கிறது இதனால் மயிலாடுதுறையில் மின்மாற்றி பழுது நீக்கும் மையம் அமைக்க வேண்டும் என குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயி கோரிக்கை விடுத்துள்ளார்.

குறைதீர்க்கும் கூட்டம்

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் மகாபாரதி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

கோபிகணேசன் (காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர்):- கனமழையால் பாதிக்கப்பட்ட தரங்கம்பாடி தாலுகாவை சேர்ந்த 8 கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

கடந்த ஆண்டு வரலாறு காணாத மழைபெய்து விவசாயம் பெரும் பாதிப்படைந்தது.

அன்பழகன்(டெல்டா பாசன விவசாயிகள் சங்க தலைவர்):- மின்மாற்றி பழுதானால் அதனை கடலூர் அல்லது திருவாரூர் கொண்டு சென்று பழுது நீக்கி வருகின்றனர். இதனால் காலதாமதம் ஏற்பட்டு தண்ணீர் இன்றி பயிர்கள் கருகும் நிலை ஏற்படுகிறது. எனவே மின்வாரியம் சார்பில் மின்மாற்றி பழுது நீக்கும் மையம் மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும்.

மதுபாட்டில்களை வயல்களில் வீசி செல்கின்றனர்

மது அருந்திவிட்டு பாட்டில்களை வயல்களில் வீசி செல்கின்றனர். இதனால் விவசாயிகள்,விவசாய கூலி தொழிலாளர்களுக்கு காயம் ஏற்படுகிறது. வீரமணி:- பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் நிலையங்களில் வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அகோரம்:- கொள்ளிடம் ஆற்றில் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி மணல் எடுக்கப்படுகிறது.

ராமலிங்கம்:- மயிலாடுதுறை மாவட்டத்தில் பம்புசெட் நீரை கொண்டு முன்பட்ட குறுவை சாகுபடிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். சி, டி பிரிவு வாய்க்கால்கள் சாகுபடி பணிகள் தொடங்குவதற்கு முன்பு செய்தால்தான் பயிர்கள் சேதமடையாமல் இருக்கும். தற்போது தூர்வாரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. முதலில் சி, டி பிரிவு வாய்க்கால்களை தூர்வார வேண்டும்.

முழுமையான இழப்பீடு வழங்கவில்லை

பாண்டுரங்கன்:- வேளாண் பொறியியல் துறையில் எந்திரங்கள் வாங்கும்போது இந்த பகுதி மண்தன்மைக்கு உகந்த வகையிலான நவீன எந்திரங்களை கொள்முதல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியா தட்டுப்பாட்டை போக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். வரதராஜன்:- கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றும் கிராமங்களிலேயே தங்கவேண்டுமென்று அரசு ஆணையிட்டுள்ளது.

ஆனால் யாரும் பணியாற்றும் கிராமங்களில் வசிப்பதில்லை.

அரசு ஆணையை செயல்படுத்த வேண்டும். இயற்கை விவசாயத்திற்கு உற்பத்தி செய்யப்பட்ட பாரம்பரிய நெல்ரகங்களை ரேஷன்கடைகள் மூலம் விற்பனை செய்வதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சீனிவாசன்:- தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்கு நிலம் கையப்படுத்தி 9 ஆண்டுகள் ஆகிறது. அதற்கான முழுமையான இழப்பீடு இதுவரை வழங்கப்படாமல் உள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

ராஜேந்திரன்:- பழவாற்றில் ஆகாயத்தாமரை செடிகள் மண்டிகிடக்கிறது. இது பாசன மற்றும் வடிகால் ஆறாக இருப்பதால் ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும். மணல்மேடு பகுதியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அமைக்க வேண்டும். பாபு:- ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலையில்தான் உளுந்து, பயறு தற்போது கொள்முதல் செய்யப்படுகிறது. அதன் விலைகளை உயர்த்தி அறிவிக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

அரவிந்தன்:- கொள்ளிடம் வட்டாரத்தில் அதிக அளவில் நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது. அதனை ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர், காவிரி வடிநிலக்கோட்ட செயற்பொறியாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா மற்றும் அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com