மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு மத்திய அரசை வலியுறுத்த தமிழக குழு டெல்லி பயணம்

மேகதாது விவகாரத்தில் மத்திய அரசை வலியுறுத்த தமிழக அனைத்து கட்சி குழுவினர் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றனர். எடியூரப்பாவும் பிரதமரை சந்திக்க டெல்லி செல்வதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேகதாதுவில் கர்நாடகம் அணை கட்ட எதிர்ப்பு மத்திய அரசை வலியுறுத்த தமிழக குழு டெல்லி பயணம்
Published on

சென்னை,

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்னும் இடத்தில் புதிய அணை ஒன்றை கட்ட கர்நாடக அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்த தமிழக அரசு சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த12-ந்தேதி மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில், சட்டமன்ற அனைத்துக்கட்சியினருடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியை எதிர்த்து 3 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, அனைத்து கட்சி நிர்வாகிகள் நேற்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லி சென்றனர்.

முதலாவதாக, நேற்று காலை 10.50 மணிக்கு சென்னையில் இருந்து டெல்லிக்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து, நேற்று மாலை தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, காங்கிரஸ் கட்சி சார்பில் கோபண்ணா, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, பா.ஜ.க. சார்பில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. பெரியசாமி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர்.

முன்னதாக அவர்கள், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி:- மேகதாது விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிகளிடம் ஆலோசனை கேட்டு ஒருமித்த கருத்துக்களின் அடிப்படையில் மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க உள்ளோம். மத்திய அரசிடம் நம்பிக்கையின் அடிப்படையிலேயே அனைத்து கோரிக்கைகளும் எடுத்து வைக்கிறோம். அணை விவகாரத்தில் சட்டப்பாதுகாப்பு இருந்தாலும் கூட படிப்படியாக கோரிக்கைகளை எடுத்து வைப்போம். அதன் முதல் கட்டமாக மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசை சந்தித்து கோரிக்கையை எடுத்துவைக்க உள்ளோம்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ:- தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான உயிர் பிரச்சினையான காவிரியில் ஏற்கனவே இழந்ததுபோக கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்தில் விளைந்த நிலங்கள் தரிசு நிலங்களாக மாறக்கூடிய பேராபத்து இருக்கிறது. தமிழகத்தை பாதுகாக்க ஒட்டுமொத்த குரலாக அனைத்து அரசியல் கட்சிகளும் சேர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை மத்திய நீர்வளத்துறை மந்திரியிடம் தெரிவிக்க உள்ளோம். இது தனிப்பட்ட குரல் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல் என்பதை பதிவு செய்ய செல்கிறேன். மத்திய அரசு மீது நம்பிக்கை கிடையாது. மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்தும், நயவஞ்சகம் செய்தும் வருகிறது. புதிய கல்வி திட்டம், நீட் தேர்வு, மேகதாது உள்பட அனைத்து பிரச்சினைகளில் பா.ஜ.க. தலைமையிலான மோடி அரசு தமிழகத்திற்கு தொடர்ந்து வஞ்சகம், துரோகம் செய்து வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

தமிழகத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சட்டமன்ற கட்சி அனைத்து பிரதிநிதிகளும் நேற்று இரவு டெல்லி சென்றனர். இவர்கள் அனைவரும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய ஜல்சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது, தமிழகத்தில், அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் அவரிடம் வழங்கி, மேகதாது அணை கட்ட அனுமதிக்கக்கூடாது என்பதை வலியுறுத்துகிறார்கள்.

மேலும், இந்தக் குழுவினர், பிரதமர் நரேந்திரமோடியையும் சந்தித்து பேச திட்டமிட்டுள்ளனர். அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அவரையும் சந்தித்து தமிழக அரசின் குரலை ஓங்கி ஒலிக்க இருக்கின்றனர்.

இந்த நிலையில் கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா இன்று (வெள்ளிக்கிழமை) திடீர் பயணமாக டெல்லி செல்கிறார்.

இதுகுறித்து எடியூரப்பா பெங்களூருவில் நேற்று மாலை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நான் நாளை (அதாவது இன்று) டெல்லி செல்கிறேன். பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். அவர் இன்னும் நேரம் ஒதுக்கவில்லை. ஆனால் நேரம் கிடைக்கும் என்று எனக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதனால் பிரதமரிடம் மேகதாது உள்பட பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு உதவி செய்யுமாறு கேட்க உள்ளேன். மேலும் சம்பந்தப்பட்ட மத்திய மந்திரிகளை சந்தித்து, நீர்ப்பாசன திட்டங்களுக்கு தேவையான நிதி உதவிகளை வழங்குமாறு கேட்க இருக்கிறேன்.

இந்த சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாளை மறுநாள்(அதாவது நாளை) பெங்களூரு திரும்புகிறேன். இந்த பயணத்தின்போது மந்திரிசபை மாற்றம் குறித்து விவாதிக்கும் திட்டம் இல்லை. இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

பிரதமரை நேரில் சந்திக்கும்போது மேகதாது திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு எடியூரப்பா கேட்க உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com