மேகமலை வனப்பகுதியில்தேயிலை தோட்டத்தில் புகுந்து வீடுகளை சூறையாடிய அரிக்கொம்பன் யானை

மேகமலை வனப்பகுதியில் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை 3 வீடுகளை சேதப்படுத்தியது. மேலும் அங்கிருந்த அரிசியையும் தின்று தீர்த்தது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மேகமலை வனப்பகுதியில்தேயிலை தோட்டத்தில் புகுந்து வீடுகளை சூறையாடிய அரிக்கொம்பன் யானை
Published on

அரிக்கொம்பன் யானை

இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை பகுதிகளில் சுற்றித் திரிந்த அரிக்கொம்பன் என்ற காட்டு யானை அந்த பகுதியில் அரிசிக்காக வீடுகள், ரேஷன் கடைகளை சேதப்படுத்தியது. கடந்த 5 ஆண்டுகளில் 8 பேரை அந்த யானை கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த யானையை கேரள வனத்துறையினர் கடந்த மாதம் 29-ந் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.இந்த யானையை தமிழக-கேரள மாநில எல்லையில் பெரியாறு புலிகள் காப்பக பகுதியில் விட்டனர். அந்த யானை அங்கிருந்து இடம் பெயர்ந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழைந்தது. தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் மலைப்பகுதியில் அந்த யானை சில நாட்களாக தஞ்சம் அடைந்துள்ளது. மலைப்பகுதியில் கம்பீரமாக அந்த யானை உலா வருகிறது.

வீடுகள் சூறை

இந்நிலையில் நேற்று அதிகாலை மேகமலை தேயிலை தோட்ட குடியிருப்பின் அருகே பத்துக்கோடு பகுதியில் அரிக்கொம்பன் சுற்றித்திரிந்தது. பின்னர் அங்கிருந்த 3 வீடுகளை சேதப்படுத்தியது. இதையடுத்து வீடுகளில் உணவுக்காக வைத்திருந்த அரிசியை தின்று தீர்த்தது. இதற்கிடையே தேயிலை தோட்டத்தில் வேலை இல்லாததால் 3 பேர் மட்டும் அங்கு இருந்தனர். அவர்கள் யானை வருவதை கண்டதும் பதறியடித்து கொண்டு தப்பி ஓடினர். பின்னர் அங்கேயே உலா வந்த யானை சிறிது நேரத்திற்கு பிறகு திரும்பி சென்றது. இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

அரிக்கொம்பன் யானையை நேரில் பார்த்த தொழிலாளர்கள் கூறுகையில், யானையின் கழுத்தில் பெல்ட் கட்டியிருந்தது. அதன் கண்கள் சிவப்பு நிறத்தில் ஆக்ரோஷமாக இருந்ததாகவும், எங்களை தாக்க விரட்டியதில் ஓடிச் சென்று மரத்தில் ஏறி அவர்கள் தப்பித்ததாகவும் கூறினர். எனவே அரிக்காம்பனின் அட்டகாசத்தை தடுக்க அதனை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com