

சென்னையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுந்த வண்ணம் உள்ளன. இந்தநிலையில் நேற்று பெய்த மழையில் சென்னை மயிலாப்பூர், மெரினாவில் இருந்து அண்ணா சாலை செல்லும் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையின் குறுக்கே, அருகில் இருந்த துங்கமரத்தின் பெரிய கிளை ஒன்று முறிந்து விழுந்தது.
அதிர்ஷ்டவசமாக வாகன ஓட்டிகள் யாரும் அருகில் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் அந்த வழியே போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த மயிலாப்பூர் தீயணைப்பு துறையினர், மணி நேரத்தில் விழுந்த மரத்தின் கிளையை முழுவதுமாக அகற்றினர். இதையடுத்து போக்குவரத்தை சரி செய்யப்பட்டது.