நாமக்கல் மாவட்டத்தில்மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவுக்கு 914 முகாம்கள்கண்காணிப்பு அலுவலர் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில்மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவுக்கு 914 முகாம்கள்கண்காணிப்பு அலுவலர் தகவல்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்ட விண்ணப்ப பதிவுக்கு 2 கட்டங்களாக 914 முகாம்கள் நடைபெற இருப்பதாக கண்காணிப்பு அலுவலர் குமரகுருபரன் தெரிவித்து உள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மகளிர் உரிமை திட்டம் விண்ணப்பப்பதிவு முகாம் முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் உமா முன்னிலை வகித்தார். தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அரசு செயலாளரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான குமரகுருபரன் தலைமை தாங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டத்துக்காக முதல்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி வரையும், 2-ம் கட்ட முகாம் ஆகஸ்டு 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடக்கிறது. இம்முகாம் காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடக்கிறது. விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளிலும் முகாம் நடக்கும்.

914 முகாம்கள்

விண்ணப்ப பதிவு முகாம் பணிகளை ஒருங்கிணைக்க 15 முதல்நிலை அலுவலர்களை கொண்ட மாவட்ட அளவிலான பணிக்குழு நியமிக்கப்பட்டு உள்ளது. அதேபேல் 24 அலுவலர்களை கொண்ட மாவட்ட அளவிலான மேற்பார்வை குழுவும் அமைக்கப்பட்டு உள்ளது.

முதற்கட்டமாக நடக்கும் 611 முகாம்களுக்கும், 2-ம் கட்டமாக நடக்கும் 303 முகாம்களுக்கும், 914 முகாம் பொறுப்பு அலுவலர்கள், 5 முகாமிற்கு ஒருவர் என 126 மண்டல அலுவலர்கள், 15 முகாமிற்கு ஒருவர் என 49 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் விண்ணப்ப பதிவு பணிகளை மேற்கொள்ள, 4,800-க்கும் மேற்பட்ட இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மாவட்டத்தில் மகளிர் உரிமை திட்டத்தில் விண்ணப்பிக்கும் தகுதியுடைய குடும்ப தலைவிகள் அனைவருக்கும், இத்திட்டம் சென்றடையும் வகையில், அனைத்து அலுவலர்கள், பணியாளர்கள் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் (பொறுப்பு) லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவகுமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செல்வகுமரன், தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பிரபாகரன், உதவி ஆணையர் (கலால்) பாலமுருகன் முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com