

சென்னை,
சென்னை சிந்தாதரிப்பேட்டையில் உள்ள சிஐடியூ அலுவலகத்தில் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் 23 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டன. கூட்டத்தில் போராட்டத்தை தீவிரப்படுத்துவது தொடர்பாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் பேட்டி அளித்த தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் மீதான நடவடிக்கைகளை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு முன்வர வேண்டும். அனைத்து கோட்ட தலைமை அலுவலகம் முன் நாளை மாலை குடும்பத்துடன் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது என கூறினர்.
இன்று தலைமை செயலகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக 23 முறை போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை பேச்சுவார்த்தை என்ற தொழிலாளர்களின் கோரிக்கை ஏற்கப்பட்டது.
பேச்சுவார்த்தை நடத்துவதில் தமிழக அரசு கவுரவம் பார்க்கவில்லை, போக்குவரத்து தொழிலாளர்களே கவுரவம் பார்க்கின்றன. கிட்டத்தட்ட அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது; நல்ல ஊதிய உயர்வு என்று தெரிந்தும் கவுரவம் பார்த்துக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்.
ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை 23 முறை நடைபெற்றுள்ளது; போக்குவரத்துத்துறையில் கடும் நிதி நெருக்கடியிலும் ரூ.1,250 கோடி வழங்கப்பட்டது. ஊதிய உயர்வில் போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிற்சங்கங்கள் தவறாக வழிநடத்துகின்றன என அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
#BusStrike #TransportUnion #TransportWorkers #TNGovernment #MRVijayabaskar