சென்னையில் ஒரே நாளில் 2,564 பேருக்கு கொரோனா தமிழகம் முழுவதும் 25 பேர் பலி

சென்னையில் ஒரே நாளில் 2,564 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் 25 பேர் பலியாகினர்.
சென்னையில் ஒரே நாளில் 2,564 பேருக்கு கொரோனா தமிழகம் முழுவதும் 25 பேர் பலி
Published on

சென்னை,

தமிழகத்தில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 7-ந் தேதி நுழைந்தது. ஆரம்ப கட்டத்தில் ஒரு நாளில் 2 பேர், 3 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு வந்த நிலையில், ஏப்ரல் மாதம் 2-வது வாரத்தில் இருந்து நாள் ஒன்றுக்கு 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மாத தொடக்கத்தில் தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. ஜூலை மாதத்தில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 27-ந் தேதி தமிழகத்தில் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 6 ஆயிரத்து 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும், தொடர்ந்து சராசரியாக நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வந்தனர். இதனால் மக்கள் மத்தியில் கொரோனா குறித்த அச்சம் பெரிதும் அதிகரித்தது

அதேவேளையில் தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்பும் அதிகரிக்க தொடங்கியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 25-ந் தேதி மதுரையை சேர்ந்த 54 வயது நபர் கொரோனாவுக்கு முதல் ஆளாக பலியானார். தொடர்ந்து ஜூன் மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது.

தமிழகத்தில் அதிகரிக்க தொடங்கிய கொரோனா உயிரிழப்பு, அதிகபட்சமாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதி 127 பேராக உயர்ந்தது. தமிழக வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார், தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கொரோனாவுக்கு பலியாகினர். மேலும் 50-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள், அமைச்சர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர்.

அரசின் பல்வேறு நடவடிக்கைகளால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 12-ந் தேதி முதல் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் கீழ் குறையத் தொடங்கியது. அதுமுதல் கடந்த பிப்ரவரி மாதம் வரை தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனாவால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கையும், கொரோனா தாக்குதலால் உயிரிழப்பும் படிப்படியாக குறையத் தொடங்கியது.

கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி குறைந்தபட்சமாக நாள் ஒன்றுக்கு 438 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியது.

தற்போது பொதுமக்களிடம் கொரோனா குறித்த அச்சமும் குறைந்தது. இதன் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுகிறவர்களின் எண்ணிக்கை படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.

இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 96 ஆயிரத்து 513 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 4,733 ஆண்கள், 3,086 பெண்கள் என மொத்தம் 7 ஆயிரத்து 819 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிநாடுகளில் இருந்து வந்த 2 பேரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 32 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 288 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1,225 முதியவர்களும் இடம்பெற்றுள்ளனர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2,564 பேரும், செங்கல்பட்டில் 772 பேரும், கோவையில் 540 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 22 பேரும், பெரம்பலூரில் 2 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 4 லட்சத்து 50 ஆயிரத்து 554 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 9 லட்சத்து 54 ஆயிரத்து 948 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 5 லட்சத்து 76 ஆயிரத்து 450 ஆண்களும், 3 லட்சத்து 78 ஆயிரத்து 462 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 36 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 34 ஆயிரத்து 652 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 32 ஆயிரத்து 894 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 13 பேரும், தனியார் மருத்துவமனையில் 12 பேரும் என 25 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் 7 பேரும், செங்கல்பட்டு, கோவையில் தலா 3 பேரும், கடலூர், சேலம், திருவள்ளூரில் தலா 2 பேரும், காஞ்சீபுரம், கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவாரூர், திருப்பூர், வேலூரில் தலா ஒருவரும் என 12 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்து 970 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,464 பேர் மீட்கப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் இருந்து டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 1,026 பேரும், கோவையில் 521 பேரும், செங்கல்பட்டில் 364 பேரும் குணம் அடைந்துள்ளனர். இதுவரையில் 8 லட்சத்து 87 ஆயிரத்து 663 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 54 ஆயிரத்து 315 பேர் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com