

சென்னை, கஜா புயலால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் தாக்கிய தினத்தன்று இரவில் இருந்தே சீஷா தொண்டு நிறுவனத்தின் மீட்பு மற்றும் நிவாரண குழுவினர், மருத்துவ குழுவினர் மற்றும் மறுவாழ்வு குழுவினர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரண உதவிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான உணவு பொருட்கள், தார்ப்பாய், போர்வைகள், துணிமணிகள் வழங்கப்பட்டது. மேலும் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது.
இதனைதொடர்ந்து சீஷா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், காருண்யா நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பால் தினகரன் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் மாவட்டம் திருவைமூர் கிராமத்தில் உள்ள தோப்படி தெரு உள்பட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் நிவாரண உதவிகளையும் வழங்கினார். சீஷா தொண்டு நிறுவனம் மூலம் கிராமங்களை புனரமைப்பதற்காக ரூ.2 கோடிக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் குறிப்பாக 100 கான்கிரீட் வீடுகள் பால் தினகரன் கட்டி கொடுக்கிறார்.
பாதுகாப்பான குடிநீர் வசதிகள், கிராமங்களில் சாலைகள் அமைத்தல், கழிப்பறைகள் கட்டுதல், கால்நடைகள் வழங்குதல் என சமுதாய முன்னேற்ற திட்டத்தின் மூலம் பல்வேறு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகள் செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதனை இன்னும் 6 மாதங்களுக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் உள்ள சாலைநகர் என்ற கிராமத்தில் 37 கான்கிரீட் வீடுகள் மற்றும் சமுதாய கூடம் சீஷா தொண்டு நிறுவனத்தின் மூலம் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.
இயற்கை பேரழிவுகள் இந்தியாவில் எங்கு ஏற்பட்டாலும் மாவட்ட நிர்வாகத்தின் உதவியோடு உடனடி நிவாரணம் மற்றும் மறுவாழ்வு பணிகளில் ஈடுபடுவது சீஷா தொண்டு நிறுவனத்தின் பல்வேறு சேவைகளில் ஒன்றாகும். ஓகி புயல் மற்றும் கேரள வெள்ளப்பெருக்கின்போது பாதிக்கப்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.