

சென்னை,
தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் 20-க்கும் மேற்பட்ட தாழ்த்தப்பட்டோரின் வீடுகள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டதையும், அப்பாவி மக்கள் பலர் கடுமையான தாக்குதலுக்குள்ளானதையும் காவல்துறை அதிகாரிகள் தங்களுடைய கடமையைச் செய்யாமல் வேடிக்கை பார்த்ததும் கடும் கண்டனத்திற்குரியது.
தமிழகம் முழுவதும் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதில் மட்டுமல்ல ஒரு சில இடங்களில் வாக்குச் சாவடியை கைப்பற்றவும் அ.தி.மு.க. கூட்டணியினர் நடத்தியுள்ள அராஜகங்களை ஆங்காங்கே உள்ள மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் தடுக்கத்தவறி சட்டம்- ஒழுங்கிற்கும் பொது அமைதிக்கும் பேராபத்தை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
வீடுகளை உடைக்கும் கேடான பழக்கத்திற்கு மீண்டும் தூபம் போட்டு ஒரு சில சக்திகள் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் கலவரம் ஏற்படுத்தியதை காவல்துறை முன்கூட்டியே தடுத்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, சமூக நல்லிணக்கத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டி அரசியல் ஆதாயம் தேட நினைப்பது அப்பட்டமான சுயநலம் மட்டுமின்றி தோல்வியின் விளிம்பில் நிற்பவர்கள் அப்பாவி மக்களின் உயிர்களைப் பணயம் வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி.
இந்தப்போக்கை சம்பந்தப்பட்ட சுயநல சக்திகள் கைவிட வேண்டும். காவல்துறை அதிகாரிகள் இதுபோன்ற மனப்பான்மை கொண்டோரின் சதித்திட்டங்களை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.