ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கப்பல்கள்-விமானங்கள் இடைவிடாத ரோந்து

இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பல் வந்துள்ளதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.
Published on

ராமேசுவரம்

இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவு கப்பல் வந்துள்ளதன் எதிரொலியாக ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

சீன உளவு கப்பல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம் கடல் பகுதியானது, இலங்கை கடல் பகுதிக்கு அருகே உள்ளது.

எனவே தமிழகத்தில் உள்ள கடல் பகுதிகளிலேயே ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்தநிலையில், சீன உளவு கப்பல் நேற்று இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பல் ஒரு வாரத்திற்கு அங்கு நிறுத்தி வைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்த சீன உளவு கப்பலில் நவீன ரேடார்கள் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

தீவிர கண்காணிப்பு

இலங்கைக்கு சீன உளவு கப்பல் வந்ததன் எதிரொலியாக ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தனுஷ்கோடி உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தின் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான 8 கப்பல்களும், 2 விமானம், 3 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்டவை இடைவிடாத ரோந்து பணியில் ஈடுபட்டு உள்ளன.

அதிநவீன ரேடார்

குறிப்பாக இலங்கை கடல் பகுதியில் இருந்து ஏதேனும் சந்தேகப்படும்படியான படகுகள் நடமாட்டம் உள்ளதா? அகதி என்ற போர்வையில் யாரும் ஊடுருவி விடக்கூடாது? என்பதற்காக, கீழக்கரை கடற்கரையில் உள்ள கலங்கரை விளக்கத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள அதிநவீன ரேடார் மூலமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com