சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு தமிழகம் ஆதரவு அளிக்கக்கூடாது எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்த அய்யப்ப பக்தர்கள் முடிவு

சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு ஆதரவு அளிக்கக்கூடாது என்று சென்னையை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் சார்பில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளிக்க உள்ளதாக விசுவ ஹிந்து பரிஷத் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம் கூறினார்.
சபரிமலை விவகாரத்தில் கேரள அரசுக்கு தமிழகம் ஆதரவு அளிக்கக்கூடாது எடப்பாடி பழனிசாமியிடம் வலியுறுத்த அய்யப்ப பக்தர்கள் முடிவு
Published on

சென்னை,

சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன்-குருவாயூரப்பன் கோவில் ஸ்ரீ அய்யப்ப பக்த சபா சார்பில் சபரிமலை புனிதம் காப்போம் என்ற தலைப்பில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், அகில உலக விசுவ ஹிந்து பரிஷத் முன்னாள் செயல் தலைவர் வேதாந்தம், விசுவ ஹிந்து பரிஷத் தேசிய செயலாளர் கிரிஜா சேஷாத்ரி, பா.ஜனதா மாநில செயலாளர் அனு சந்திரமவுலி, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார், சென்னை மகாலிங்கபுரம் அய்யப்பன்-குருவாயூரப்பன் கோவில் ஸ்ரீ அய்யப்ப பக்த சபா செயலாளர் சசிக்குமார், உலக நாயர் சேவா சொசைட்டி தலைவர் சிவதாசன் பிள்ளை, தமிழ்நாடு நாயர் சேவா சொசைட்டி தலைவர் வாசுகுட்டன், வடதமிழ்நாடு அய்யப்ப சேவா சமாஜத்தின் தலைவர் ஏ.எம்.ரத்னம் மற்றும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த 38 அய்யப்பன் கோவில் நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிவில், வேதாந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:- சபரிமலை அய்யப்பன் கோவிலில் பாரம்பரிய முறைப்படி 10 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் வரும் சம்பிரதாயம் இல்லை. இதனை, இந்துமத கோட்பாடுகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் சபரிமலையில் பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும், இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்த போதே சுப்ரீம் கோர்ட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்து இருக்க வேண்டும். காரணம் அவர்கள் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல.

கேரள மாநில கம்யூனிஸ்டு கட்சியினர் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதில் அதிதீவிரமாக செயல்படுகின்றனர். அவர்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் அவர்கள் குடும்ப பெண்களை அழைத்து வர வேண்டும். கேரளத்தை சேர்ந்த பெண்கள் அங்கு வரமாட்டார்கள். இதனால், இயற்கையாகவே கேரளாவில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அவர்களை அடக்கும் முறையில் 4 ஆயிரத்து 500 பேர் மீது வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர்.

தற்போது, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களின் தலைமை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை 31-ந் தேதி கேரளாவுக்கு அழைத்து பொய்யான தகவல்களை தெரிவித்து அவர்களின் ஆதரவை திரட்ட உள்ளனர். இதனால், சென்னையில் உள்ள அய்யப்ப கோவில் நிர்வாகிகள் இணைந்து, இது மக்களுக்கு விரோதமான தீர்ப்பு எனவே, நீங்கள் அதற்கு ஆதரவு தெரிவிக்கக் கூடாது என்று, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை சந்தித்து அய்யப்ப பக்தர்கள் கையெழுத்துகள் அடங்கிய மனுவை வருகிற 30-ந் தேதி(நாளை) செவ்வாய்க்கிழமை வழங்குவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் பெண் பக்தர்களின் கையெழுத்துகள் பெறப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com