சீர்காழியில், விவசாயிகள் சாலைமறியல்

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சீர்காழியில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழியில், விவசாயிகள் சாலைமறியல்
Published on

சீர்காழி:

மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி சீர்காழியில் விவசாயிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சாலைமறியல்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரே நாளில் 43 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சீர்காழி பகுதியில் உள்ள குடியிருப்புகள், விளைநிலங்கள் மழை நீரால் பாதிக்கப்பட்டன. சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவிற்குட்பட்ட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் தமிழக அரசு சார்பில் ரூ. 1,000 நிவாரண உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது. சீர்காழி உதவி கலெக்டர் அலுவலகம் எதிரே மயிலாடுதுறை சாலையில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்கக்கோரி சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு பொதுச்செயலாளர் பி.ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.5 ஆயிரம்

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை பேரிடர் பாதித்த தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அனைத்து வங்கி விவசாய கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். வேலை இழந்த கூலி தொழிலாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பயிர் காப்பீட்டு தொகையை 100 சதவீதம் வழங்க வேண்டும். தொடர்மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. இந்த சாலை மறியல் போராட்டம் 2 மணி நேரம் நடைபெற்றது.

2 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த உதவி கலெக்டர் அர்ச்சனா சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதையடுத்து சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. போராட்டத்தில் சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை சீர்காழி போலீஸ் இன்ஸ்பெக்டர் புயல்பாலச்சந்திரன் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com