

சென்னை,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்களும், மரங்களும் சாலைகளில் சரிந்து கிடக்கின்றன. எனவே, கடந்த 48 மணி நேரமாக மின்சாரம் முழுமையாகத் தடைப்பட்டுள்ளது. போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. ரப்பர் தோட்டங்கள், வாழை, தென்னை, கரும்புத் தோட்டங்கள், நெல் வயல்கள் நீரில் மூழ்கிக் கிடக்கின்றன.
மழையால் 5 பேர் உயிர் இழந்துள்ளனர். எனவே, தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும், மேலும் உயிர் இழப்புகள் ஏற்படாத வகையில் தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் போர்க்கால வேகத்தில் மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். உயிர் இழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கிட வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வதுடன், ம.தி.மு.க. தொண்டர்கள் தத்தமது பகுதிகளில் நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் உருவாகியுள்ள ஒகி புயலால் தென் மாவட்டங்கள் மிகக்கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டிருக்கின்றன. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் துண்டிக்கப்பட்டு தனித்தீவாக மாறியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் துரை தலைமையிலான படையினர் நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்டல், சாய்ந்த மரங்களை அகற்றுதல் போன்ற பணிகளை சிறப்பாக செய்து வருகின்றனர். ஆனாலும் புயல், வெள்ள பாதிப்புகளின் தீவிரத்துடன் ஒப்பிடும்போது மீட்புப் பணிகளின் வேகம் போதாது.
புயல், வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய அமைச்சர் உதயகுமார் மற்றும் அதிகாரிகளும், மாநில பேரிடர் மீட்புக்குழுவும் விரைந்திருப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கும் போதிலும், கள நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை.
கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் மழை காரணமாக இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் உடனடியாக விரைவுபடுத்தப்படாவிட்டால், பல காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு அலட்சியம் காட்டக்கூடாது.
தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் தேவைப்பட்டால் மத்திய அரசிடம் இருந்தும் மீட்புக் குழுவினரை வரவழைத்து தென் மாவட்டங்களில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் உருவான ஒகி புயல் காரணமாக தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக குமாரகோவில், தக்கலை, பார்வதிபுரம், அரண்மனை, திங்கள்சந்தை, வில்லுக்குறி சேதம் அடைந்து உள்ளது மிகவும் வேதனைக்குரியது. சுமார் 200க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்ததால் நாகர்கோவில் தொடங்கி மார்த்தாண்டம் வரை 30 மணி நேரம் கடந்தும் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
உணவு தட்டுப்பாடு, வர்த்தகம் மற்றும் வெள்ளநீர் அபாயத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை உடனடியாக மீட்க போர்க்கால அடிப்படையில் மரங்களை அகற்றும் பணி, மின் கம்பங்கள் சீர்செய்தல், போக்குவரத்தை சரி செய்தல் போன்ற பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு, மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மீள உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.