ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தை ரூ.7 ஆயிரம் கோடியில் விரிவுபடுத்த திட்டம் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமை நிர்வாகி சந்திப்பு

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனம் ரூ.7 ஆயிரம் கோடி செலவில் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் நிறுவனத்தை ரூ.7 ஆயிரம் கோடியில் விரிவுபடுத்த திட்டம் எடப்பாடி பழனிசாமியுடன் தலைமை நிர்வாகி சந்திப்பு
Published on

சென்னை,

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க மாநில அரசு பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மிகப்பெரிய தொழில் நிறுவனங்களை தங்கள் மாநிலங்களில் முதலீடு செய்ய வைப்பதில் நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையே கடும் போட்டிகள் நிலவுகின்றன.

எனவே இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான அனைத்து அனுமதிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு இருப்பதுடன், தொழில் நிறுவனங்கள் அரசை எளிதில் அணுகும் சூழலும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் புதிய சலுகைகளை வழங்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஹூண்டாய் கார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும், மேலாண் இயக்குனருமான ஒய்.கே.கூ, துணைத்தலைவர் ரத்தார் ஆகியோர் நேற்று சுமார் மணி நேரம் சந்தித்து பேசினர். அப்போது, ஹூண்டாய் நிறுவனத்தின் வருங்கால முதலீடு திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.சண்முகம், ஹூண்டாய் நிறுவன மூத்த நிர்வாகிகள் பி.சி.தத்தா, ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பின் ஒய்.கே.கூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
எங்களது புதிய முதலீடுகள் குறித்து முதல்-அமைச்சரிடம் விளக்கமாக கூறியிருக்கிறோம். குறிப்பாக ரூ.7 ஆயிரம் கோடி செலவில் ஹூண்டாய் நிறுவனத்தை விரிவுபடுத்த இருக்கிறோம். இது எங்களின் உற்பத்தித் திறனின் உயர்வைக் காட்டுகிறது. இந்த புதிய முதலீட்டுக்குப் பிறகு, தற்போதுள்ள 7 லட்சம் வாகன உற்பத்தி, 8 லட்சமாக உயரும். இதன் மூலம் கூடுதலாக சுமார் 700 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்படும் பாகங்களைப் பொருத்தி 50 ஆயிரம் வாகனங்களை உருவாக்கியும், முற்றிலும் இங்கேயே 50 ஆயிரம் வாகனங்களை தயாரித்தும் ஏற்றுமதி செய்யும் திட்டங்களை வைத்துள்ளோம். மேலும், மின்சாரத்தில் இயங்கும் புதிய வாகனத்தை அடுத்த ஆண்டில் அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

அதன்படி முதல் கட்டமாக 60 ஆயிரத்து 25 மின்சார வாகனங்கள் உள்பட 10 மாடல் வாகனங்களை, பாகங்களை வாங்கி பொருத்துவதன் மூலம் தயாரிப்போம். பின்னர் ஹூண்டாய் நிறுவனத்திலேயே 3 ஆண்டுகளில் மின்சார வாகனங்களை தயாரிக்கத் தொடங்குவோம்.

இந்த விரிவுபடுத்தும் திட்டத்துக்கான ஆதரவை முதல்-அமைச்சரிடம் கோரியுள்ளோம். அவரும் பரிசீலிப்பதாக தெரிவித்தார். வரி சலுகைகள், மின்சாரம், தண்ணீர் வசதி, போக்குவரத்து போன்ற வசதிகளை செய்து தந்து ஆதரவு தருவார்கள். ஜனவரியில் நடைபெறும் முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.7 ஆயிரம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com