

சென்னை,
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் கூறியதாவது:-
ஒடிசா அருகே காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது நிலவி வருகிறது. இதைத் தொடர்ந்து வரும் 9-ம் தேதி வடக்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புஉள்ளது. இது அடுத்த 2 நாட்களில் வட மேற்கு திசையில்வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வரும் 11, 12, 13 ஆகிய தேதிகளில் 2 மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவினால் தமிழகத்தில் மழை குறைந்துவிடும். வழக்கமாக, அக்டோபர் மாதத்தில் வெப்பநிலை குறைவாகவே இருக்கும். ஆனால் மதுரை விமான நிலையத்தில் நேற்று 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
இதன் காரணமாகவும், தமிழகம் நோக்கி வடமேற்கு திசையில் இருந்து காற்று வீசுவது வலுவாக இருப்பதாலும், வடக்கு வங்கக் கடல் பகுதியில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி நிலவுவதாலும் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்குவது தாமதமாக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.