தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேலும் ரூ.200 கோடி ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி உத்தரவு

தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேலும் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டு வரவும் நிதி ஒதுக்கி இருக்கிறார்.
தமிழகத்தில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மேலும் ரூ.200 கோடி ஒதுக்கீடு எடப்பாடி பழனிசாமி உத்தரவு
Published on

சென்னை,

பருவமழை போதிய அளவில் பெய்யாததால் தமிழகத்தில் வறட்சி நிலவுகிறது.
ஏரி, குளங்கள் காய்ந்து கிடப்பதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. குடிநீருக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் பல இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள குடிநீர் வினியோகம் பற்றி விரிவான ஆய்வு நடத்தி அறிவுரைகள் வழங்கினார்.

மாநிலம் முழுவதும் சீராக குடிநீர் வழங்கும் வகையில், இந்த ஆண்டு ஏற்கனவே ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வு கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்திற்கு பிறகு, முதல்-அமைச்சர் குடிநீர் திட்டப்பணிகளுக்கு கூடுதலாக ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டார்.

இந்த தொகை மூலம் பெருநகர சென்னை மாநகராட்சி, இதர மாநகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரகப் பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து தினமும் 1 கோடி லிட்டர் குடிநீரை சென்னை வில்லிவாக்கத்திற்கு ரெயில்வே வேகன் மூலமாக கொண்டுவந்து சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக தனியாக ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்து ஆணையிட்டு உள்ளார். 6 வாரங்களுக்கு இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த தகவலை தமிழக அரசு செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- ஜோலார்பேட்டை யில் இருந்து ரெயிலில் நீர் கொண்டுவருவதாக சொல்கிறீர்கள்? எங்கிருந்து எடுக்கிறீர்கள்?

பதில்:- இதற்காக ஏற்கனவே திட்டம் தீட்டப்பட்டு பல்வேறு இடங்களில் இருந்தும் அங்கு தண்ணீர் கொண்டுவந்து சேமித்து கொடுக்கிறார்கள்.

கேள்வி:- கேரளாவில் இருந்து தண்ணீர் கொண்டுவர முடிவு செய்யப்பட்டு இருக்கிறதா?.

பதில்:- கேரளாவில் இருந்து ஒரு நாளைக்கு 2 மில்லியன் (20 லட்சம்) லிட்டர் தண்ணீர் தருவதாக கூறினார்கள். அதுவும் தினமும் இல்லை. ஒரு நாளைக்குத்தான் தருவதாக சொல்லி இருக்கிறார்கள். இதற்காக கேரளா முதல்-மந்திரிக்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இருந்தாலும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் என்பது போதாது. நாமே சென்னைக்கு தினந்தோறும் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகித்து கொண்டிருக்கிறோம். தினந்தோறும் 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் தந்தால் நமக்கு சாதகமாக இருக்கும். மக்களுக்கு நன்மை பயக்கும். இதுகுறித்து இனிமேல் தான் கடிதம் எழுதவேண்டும். அவர்கள் தருவதாக கூறி இருக்கிறார்கள். அதை வரவேற்கிறோம்.

கேள்வி:- நீர்நிலைகள் தூர்வாரப்பட்டுள்ள நிலை என்ன? நிலத்தடி நீரை செறிவூட்டுவதற்கு ஏதாவது திட்டங்கள் இருக்கிறதா?.

பதில்:- சென்னையை பொறுத்தவரைக்கும் பூண்டி, சோழவரம், செங்குன்றம், செம்பரம்பாக்கம் என 4 ஏரிகள் இருக்கின்றன. அரசுக்கு வருவாய் கிடைக்கின்ற விதமாக டெண்டர் விடப்பட்டு 3 ஏரிகளில் பணி தொடங்கப்பட்டு விட்டது.

பூண்டி ஏரியை பொறுத்தவரைக்கும் தனியார் ஒருவர் நீதிமன்றத்திற்கு சென்றதால், சுற்றுச்சூழல் துறையில் இருந்து அனுமதி பெற வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் சுற்றுச்சூழல் அனுமதி பெற்றுத்தான் அந்த ஏரியை நாம் தூர்வார முடியும்.

கேள்வி:- அமைச்சர் வீடுகளுக்கு தினந்தோறும் 2 லாரி தண்ணீர் செல்கின்றது என்று...?

பதில்:- இது தவறான செய்தி. உங்களுக்கு எப்படி தண்ணீர் கிடைக்கின்றதோ அதுபோலத்தான் எல்லோருக்கும் கிடைக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி கர்நாடகத்தில் பிரசாரம் செய்கையில், தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்று கூறினார்.

அவர் கூறியபடி, மேகதாது அணை கட்டப்பட்டாலோ, காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்பட்டாலோ தமிழகம் பாலைவனமாகி விடும். அதற்கு ஸ்டாலின் என்ன பதில் சொல்லப்போகின்றார்? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இப்பொழுது கர்நாடகத்திலே அவர்களுடைய கூட்டணி ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி நடந்துகொள்ள வேண்டும் என கர்நாடக அரசை வலியுறுத்துமாறு காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நண்பர்களை கேட்டுக்கொள்கின்றேன்.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் மூலமாக நமக்கு 9.19 டி.எம்.சி. தண்ணீர் இந்த மாதம் திறக்கப்பட வேண்டும். அதனை திறக்க மறுக்கின்றார்கள். இப்படிப்பட்ட காலகட்டத்தில், மேகதாது அணை கட்டப்பட்டால் ஒரு சொட்டு தண்ணீர்கூட தமிழகத்துக்கு கிடைக்காது. சுப்ரீம் கோர்ட்டு தெளிவான தீர்ப்பை கொடுத்துவிட்டது.

நம்முடைய பிரச்சினைகளுக்கு நாம் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் கோரிக்கை வைப்போம். அதனை சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் தீர்க்கக்கூடிய சூழ்நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே, யாரையும் கெஞ்ச வேண்டிய சூழ்நிலை கிடையாது.

கேள்வி:- குடிநீர் வாரியத்தில் குடிநீருக்கு ஆன்லைனில் விண்ணப்பித்தால் குறைந்தபட்சம் 25 நாட்கள் ஆகிறது. தனியார் லாரிகள் ரூ.5 ஆயிரம், ரூ.8 ஆயிரம் கட்டணம் வசூலிக்கிறார்கள். தமிழகத்தில் தண்ணீர் திருட்டு கும்பலை எப்படி கட்டுப்படுத்த போகின்றீர்கள்?

பதில்:- மக்கள் அன்றாட தேவைக்கு அல்லல்படுகின்ற இந்த நேரத்தில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்பொழுது ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு 10 லாரிகள் பதிவு செய்தால் எப்படி தண்ணீர் கொடுக்க முடியும்?. அனைத்து தரப்பு மக்களுக்கும் இதில் உரிமை உள்ளது. தனக்கு மட்டும் தண்ணீர் கிடைத்தால் போதுமென்று இருக்கக்கூடாது. வசதி படைத்தவர்கள் ஆன்லைனில் பதிவு செய்து, தண்ணீரை பெற்றுக்கொள்ள முடியும். பணம் கொடுத்து தண்ணீரை பெறமுடியாத நிலையில் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதைத்தான் இன்றைக்கு அரசாங்கம் முதல் வேலையாக செய்து கொண்டிருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பவர்களுக்கு, அந்த குடியிருப்பிலேயே சேவை கட்டணம் வாங்குகின்றார்கள், அதை பயன்படுத்தி அவர்களுக்கு தண்ணீர் பெற்றுக்கொடுப்பது அவர்களுடைய கடமை. இருக்கின்ற தண்ணீரை வைத்து நடுத்தர மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கின்றோம். இருக்கின்ற நீரை வைத்து இன்னும் 4 மாதங்களுக்கு வழங்க வேண்டும். வட கிழக்கு பருவமழை நமக்கு நவம்பர், டிசம்பரில் தான் கிடைக்கும். அதுவரைக்கும் சீராக தண்ணீரை கொடுக்க வேண்டும்.

கேள்வி:- பஸ் டிப்போக்களில் அம்மா குடிநீர் பாட்டில்கள் வரவில்லை என்கிறார்களே?

பதில்:- குறிப்பிட்ட அளவு தண்ணீரைத்தான் நாம் இப்பொழுது உற்பத்தி செய்கின்றோம். இது மிகுந்த வறட்சியான காலமாக இருக்கின்ற காரணத்தினால், உற்பத்தி செய்வது அனைத்தும் உடனடியாக தீர்ந்து விடுகின்றது. அம்மா குடிநீர் விலை குறைவாக இருப்பதாலும், மக்கள் அதிகமாக வாங்குவதாலும் விரைவில் தீர்ந்து விடுகிறது.

விடுதி உரிமையாளர்கள் என்னை சந்தித்து பேசினார்கள். அனைத்து விடுதிகளும் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றது. அவற்றிற்கு தேவையான தண்ணீரை அவர்கள் முன்னேற்பாடு செய்து பயன்படுத்தி வருகின்றார்கள்.

அதேபோல, அனைத்து பள்ளிகளுக்கும் தடையில்லாமல் தண்ணீர் வழங்க வேண்டுமென்று ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து, அதன் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. தண்ணீர் பிரச்சினையை அரசியல் ஆக்கக்கூடாது, இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com