தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயருவதற்கு காரணம் என்ன? ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயருவதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உயருவதற்கு காரணம் என்ன? ஆய்வு செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
Published on

சென்னை,

உலக கல்லீரல் அழற்சி தினத்தையொட்டி சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு நல ஆஸ்பத்திரியில் கருவில் உள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை பரிசோதனையை மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் இருக்கும் ஒட்டுமொத்த கர்ப்பிணி தாய்மார்களை பரிசோதிக்கும் ஒரு புதிய திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கர்ப்பிணிகளுக்கு கல்லீரல் அழற்சி பாதிப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் பரிசோதனை மேற்கொள்ளப்படும். தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா பாதிப்பு சற்று உயர்ந்திருப்பது அச்சத்தை தரக்கூடிய விஷயம்தான். தொடர்ந்து இறங்குமுகமாக இருந்த தொற்றின் அளவு, நேற்று முன்தினம் 103 என்ற எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது.

சென்னை, கன்னியாகுமரி, ஈரோடு, கடலூர், கோவை மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இதற்கு காரணம் என்ன என்பது குறித்து ஆய்வு செய்ய அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுறுத்தி உள்ளோம்.

கேரளாவில் வீடுகளில் தங்கி சிகிச்சைபெறும் முறை அதிகரித்துள்ளதால்தான், அங்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதுபோல் தமிழகத்தில் இல்லாமல், தொற்று பாதித்தவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளோம்.

கொரோனாவை நிச்சயம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். அதேநேரம் பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருப்பது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது வருத்தம் அளிக்கிறது. பொதுமக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். நாளை (இன்று) காலை கலைவாணர் அரங்கில் நடக்கிற கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் கலந்துகொள்கிறார்.

மருத்துவ கல்வியில் 27 சதவீத இடஒதுக்கீடு தமிழகத்துக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தமிழகத்தில் மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் ஓ.பி.சி. இடஒதுக்கீடு மிகப்பெரிய அளவில் பயனளிக்கும். கேரளா, கர்நாடகா மாநில எல்லைகளில் தேவையான அளவில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா தொற்று சற்று அதிகரித்துவரும் சூழலில் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான கால நீட்டிப்பு குறித்து முதல்-அமைச்சர் முடிவெடுப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com