

ராஜராஜ சோழன் சதய விழா
தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தன்று சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதேபோல இந்த ஆண்டும் ஒரு நாள் மட்டுமே எளிய முறையில் 1036-வது சதயவிழா நேற்று நடந்தது.
கோவில் பணியாளர்களுக்கு புத்தாடை
காலை 6 மணிக்கு பத்மநாபன் குழுவினரின் மங்கள இசையுடன் சதய விழா தொடங்கியது. பின்னர் சிவாச்சாரியார்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சார்பில் கட்டளை விசாரணை சொக்கலிங்க தம்பிரான் சுவாமிகள் புத்தாடைகளை வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறை நூலுக்கு ஓதுவார்கள் சிறப்பு பூஜைகள் செய்து, யானை மீது வைத்து கோவிலின் உள்பிரகாரத்தில் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் நந்தி மண்டபத்தில் ஓதுவார்கள் அமர்ந்து பாராயணம் பாடினர். குஜராத்தில் இருந்து மீட்டு வரப்பட்ட ராஜராஜ சோழன், லோகமாதேவி சிலைகள் முன்பு புனித நீர் அடங்கிய கடங்கள் வைத்து சிவாச்சாரியார்கள் சிறப்பு யாகம் செய்தனர்.
48 வகையான அபிஷேகம்
பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு திரவியப்பொடி, வாசனைப்பொடி, மஞ்சள்பொடி, அரிசிமாவு, பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர் உள்ளிட்ட 48 வகையான அபிஷேகம் நடந்தது. பின்னர் பெருவுடையார்-பெரியநாயகி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.
அப்போது சமஸ்கிருதம் மட்டுமின்றி தமிழிலும் வழிபாடு நடந்தது. கருவறைக்கு வெளியே 10 ஓதுவார்கள் அமர்ந்து தேவாரம், திருவாசகத்தை பாடி தமிழில் வழிபாடு செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மின்விளக்கு அலங்காரம்
மாலையில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பெரியகோவில் பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் நடராஜர் சன்னதியில் பெருவுடையார்-பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். ராஜராஜசோழன் மற்றும் லோகமாதேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சதய விழாவையொட்டி தஞ்சை பெரியகோவில் முழுவதும் மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இது தவிர பெரியகோவிலுக்கு செல்லும் சாலையிலும் அலங்கார வளைவுகள், மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு தஞ்சை நகரமே விழாக்கோலம் பூண்டு இருந்தது. சதய விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நேற்று உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு இருந்தது.