

சென்னை,
மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மை உழைக்கும் மக்களான வன்னியர் சமூகத்துக்கு 20 சதவீதம் உள்ஒதுக்கீடு வேண்டும் என்று திடீரென பா.ம.க. கோரிக்கை எழுப்பியது. அ.தி.மு.க. கூட்டணியில் அக்கட்சி இருப்பதால் தேர்தல் பேரத்துக்கென அரசியல் ரீதியாகவும் அழுத்தம் கொடுத்தது.
இடஒதுக்கீடு என்பது சமூகநீதி என்கிறபோது, உள்ஒதுக்கீடு என்பதும் சமூகநீதியின் மிகவும் குறிப்பான- நுட்பமான பரிமாணமே ஆகும். அதில் எமக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், பா.ம.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகியவை எந்த அடிப்படையில் இதனை அணுகுகின்றன என்பதே முதன்மையானது.
சட்டப்படி செல்லாது
உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு மாநில அரசுக்கு அதிகாரம் இருந்தாலும் மக்கள்தொகை தொடர்பான முழு தரவுகளின் அடிப்படையிலேயே அதைக் கொடுக்க முடியும். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழலில் அத்தகைய எந்தத்தரவும் இல்லாதநிலையில் உள் ஒதுக்கீடு வழங்கினால் அது சட்டப்படி செல்லாததாகிவிடும்.
இந்த சட்டத்துக்கு எதிராக பாதிக்கப்படும் எம்.பி.சி. பிரிவினரில் யாரேனும் நீதிமன்றம் சென்றால், இதற்கு தடை விதிக்கப்படும் என்பது உறுதி. இந்த உண்மை பா.ஜ.க., பா.ம.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியாளர்களுக்கும் தெரியும். ஆனால், இந்த செல்லுபடியாகாத ஓட்டை சட்டத்தைக் காட்டி வன்னிய மக்களின் வாக்குகளை வாரிக்கொள்ளலாம் என அவர்கள் கனவு காண்கிறார்கள். இவர்களின் இந்த வஞ்சக சூழ்ச்சிக்கு உழைக்கும் வன்னியர் சமூக மக்கள் பலியாக மாட்டார்கள்.
கூறு போட்டது ஏன்?
வன்னியர் சமூகத்தினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குகிறோம் என்ற பெயரில், அத்தகைய கோரிக்கையையே எழுப்பாத பிற சமூகத்தினரையும் பிரித்து கூறு போட்டிருக்கிறது அ.தி.மு.க. அரசு. வன்னியரல்லாத பிற சமூகங்களைச் சார்ந்தவர்களில் யாராவது உள்ஒதுக்கீடு கேட்டனரா? போராட்டங்களை நடத்தினரா? அவர்களை ஏன் பிளவுபடுத்த வேண்டும்? 93 சாதிகளை ஒரு கூறாகவும் (7 சதவீதம்) 26 சாதிகளை கூறாகவும் (2.5 சதவீதம்) இரண்டு வகையினராக கூறு போட்டது ஏன்?
இதனால் அந்த சமூகங்களை சார்ந்தவர்கள் தமக்கான உரிமைகளை பாதுகாக்கும் அறப்போராட்டத்தில் இறங்கும்படி தள்ளப்பட்டுள்ளனர். இதனால் எம்.பி.சி.' மக்களின் ஒற்றுமையும் அவர்களின் பேர வலிமையும் வெகுவாக குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
பாடம் புகட்டுவார்கள்
ஒட்டுமொத்தத்தில் இதர பிற்படுத்தப்பட்டோரின் ஒற்றுமையை சீர்குலைத்து அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை மெல்ல மெல்ல ஒழித்துக்கட்டும் பா.ஜ.க.வின் சனாதன சதி திட்டத்தைத்தான் அ.தி.மு.க. அரசும், பா.ம.க.வும் இப்போது நிறைவேற்றி உள்ளன.
இதனை நன்கு உணர்ந்துள்ள வன்னியர் சமூக மக்களும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களும் இந்த தேர்தலில் பா.ஜ.க.- அ.தி.மு.க.- பா.ம.க. கூட்டணியைப் படுதோல்வி அடைய செய்வார்கள். அதன் மூலம் உரிய பாடத்தை அவர்களுக்கு புகட்டுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.