ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள் - ஓ.பன்னீர் செல்வம் பேச்சு

ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் பேசிய ஒ.பன்னீர் செல்வம் ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள் என கூறினார். #Jayalalithaa #OPS #AIADMK
ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள் - ஓ.பன்னீர் செல்வம் பேச்சு
Published on

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க. தலைமை அலுவலக நுழைவாயிலில் வாழைமரம், தென்னை ஓலை, பழங்களை கொண்டு அலங்கார வளைவு தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சி அலுவலகத்தை சுற்றிலும் ஜெயலலிதாவின் புகழை போற்றி விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

அ.தி.மு.க. கொடிகளும் வழி நெடுக கட்டப்பட்டுள்ளது. இதனால் அ.தி.மு.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள அவ்வை சண்முகம் சாலையே விழாக்கோலம் பூண்டுள்ளது.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதா இரட்டை விரலை உயர்த்தி இருப்பது போன்று 7 அடி உயரத்தில் இந்த வெண்கல சிலை வடிவமைக்கப்பட்டு

எம்.ஜி.ஆர். சிலை அருகே அந்த சிலை பீடத்தில் நிறுவப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் சிலையை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து திறந்துவைத்தனர்

ஜெயலலிதா தொடங்கிய நமது எம்.ஜி.ஆர். நாளிதழ் டி.டி.வி.தினகரன் அணியினர் கட்டுப்பாட்டில் இருப்பதால், அ.தி.மு.க.வுக்கு என்று அதிகாரப்பூர்வ நமது புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் நாளிதழும் வெளியிடப்பட்டது. அந்த நாளிதழை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் அறிமுகம் செய்து வைத்தனர்.

ஜெயலலிதா சிலையை வடிவமைத்த பிரசாத் என்பவருக்கு முதலமைச்சர் பழனிசாமி, தங்க மோதிரம் அணிவித்து கவுரவித்தார்

பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

ஜெயலலிதா இயக்கத்தை கட்டிக்காத்து நம்மிடையே விட்டுச் சென்றுள்ளார்கள். எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு பிரிந்திருந்த அதிமுகவை ஒன்றிணைத்தார் ஜெயலலிதா. இந்தியாவிலேயே ஒரு கட்டுப்பாட்டோடு உள்ள இயக்கம் அதிமுக என்பதை ஜெயலலிதா நிரூபித்தார்.இந்தியாவிலேயே கட்டுக்கோப்பாக கட்சியை வழி நடத்திய ஒரே தலைவர் ஜெயலலிதா தான்

ஆட்சியை கலைக்க நினைப்பவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது. நாங்கள் அனைவரும் ஒருமித்த எண்ணத்தோடு பயணித்து கொண்டிருக்கிறோம். எங்கள் ஆட்சியை தொட்டுக் கூட பார்க்க முடியாது எனக் கூறினார்.

துணை முதல்-அமைச்சர்- ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது:-

இந்த அதிமுக ஆட்சியை நடத்துவது ஜெயலலிதா; கட்சியை நடத்துவது தொண்டர்கள். அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்.

ஒரு விரல் எம்ஜிஆர், மறு விரல் ஜெயலலிதா என வாழ்ந்து வருகிறோம்; அதிமுக ஆட்சியில் மக்கள் மகிழ்ந்திருக்கிறார்கள், பாதுகாப்பாக இருக்கிறார்கள்.

மக்களை நாங்கள் காப்பாற்ற போகிறோம் என்பவர்கள் பேச்சு விரைவில் புஸ்வாணமாகிவிடும் என கூறினார். மக்களை காப்பாற்றும் ரட்சகர்கள் போல் ஒருசிலர் வீர வசனம் பேசுகிறார்கள்.

ஜெயலலிதா இல்லாத சூழலில் எதிரிகளும் துரோகிகளும் சதி திட்டம் தீட்டி வருகிறார்கள். அதிமுகவை வெல்ல நினைத்த கட்சிகள் எல்லாம் காற்றில்லாத பலூன்களாக சுருங்கிக் கிடக்கின்றன. அரசியல் வானில் அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் புதிது புதிதாக பறக்கத் தொடங்கியுள்ளன.

#JayalalithaaStatue #JayalalithaaBirthAnniversary #Jayalalithaa #AIADMK

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com