பட்டப்பகலில் பா.ம.க. நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; ஒருவர் காயம்

மதுரையில் பட்டப்பகலில் பா.ம.க. நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீசப்பட்டன. இதில் ஒருவர் காயம் அடைந்தார்.
பட்டப்பகலில் பா.ம.க. நிர்வாகி வீட்டில் வெடிகுண்டுகள் வீச்சு; ஒருவர் காயம்
Published on

மதுரை,

மதுரை மேலஅனுப்பானடி ராஜமான்நகர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம் (வயது 33). பா.ம.க. நிர்வாகியான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். வக்கீலாகவும் உள்ளார்.

நேற்று காலை அவர் ஆஸ்பத்திரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றார். அப்போது வீட்டில் அவருடைய மனைவி மனோரஞ்சிதம், 3 வயது குழந்தை மற்றும் உறவினர் சேகர் ஆகியோர் இருந்துள்ளனர்.

இந்தநிலையில் காலை 9 மணியளவில் மோட்டார்சைக்கிளில் 2 பேர் அவரது வீட்டுக்கு வந்தனர். அவர்கள் மாரிச்செல்வம் பற்றி விசாரித்தனர். அவர் வெளியே சென்றுள்ளார் என்று கூறியதும் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

பின்னர் சற்று நேரத்தில் அவர்கள் மீண்டும் வந்து வீட்டின் முன்பு 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அவை பயங்கர சத்தத்ததுடன் வெடித்துச்சிதறின. பின்னர் 2 பேரும் அங்கிருந்து தப்பினர்.

குண்டுகள் வெடித்ததில் மாரிச்செல்வம் வீட்டின் சுவரில் விரிசல் விழுந்தது. அங்கிருந்த கோழிக்கூண்டு சிதறியது. மேலும் வெளியே நின்று பேசிக்கொண்டிருந்த மாரிச்செல்வத்தின் உறவினர் சேகர் மீது வெடிகுண்டு சிதறல்கள் பட்டத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

காரணம் என்ன?

தகவல் அறிந்து கீரைத்துறை போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த சம்பவம் நடந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள். மாரிச்செல்வம் தெப்பக்குளம் பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு சட்ட ஆலோசகராக இருந்துள்ளார். அந்த மசாஜ் சென்டரில் விபசாரம் நடப்பதாக வந்த புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டனர். அதில் மாரிச்செல்வம் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தை தெரிந்து கொண்டு அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அந்த சம்பவத்திற்கும், இந்த வெடிகுண்டு வீச்சுக்கும் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கண்காணிப்பு கேமரா காட்சிகள்

போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டனர். அதில் நம்பர் பிளேட் இல்லாத மோட்டார் சைக்கிளில் 2 பேர் மாரிச்செல்வம் வீட்டிற்கு வந்து சென்றது பதிவாகி உள்ளது. அவர்களை போலீசார் தேடிவருகின்றனர். மதுரையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com