

ஆவடி,
ஆவடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டும் அமைச்சர் பாண்டியராஜன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவர், நேற்று ஒரு நாள் முழுவதும் ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் சாமி தரிசனம் செய்து பிரசாரத்தை தொடங்கினார்.
முதலில் திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள மன்னாதீஸ்வரர் பச்சையம்மன் கோவிலில் தனது மனைவியுடன் சென்று சாமி தரிசனம் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் எஸ்.அப்துல் ரஹீம் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடன் வந்தனர். பின்னர் திருநின்றவூர், திருவேற்காடு, கோவில்பதாகை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில், தர்கா, தேவாலயங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
அப்போது நிருபர்களிடம் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது:-
அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இல்லாதது, இன்னொரு 15 அ.தி.மு.க.வினர் கூடுதலாக போட்டியிட வாய்ப்பு கொடுத்திருப்பதாக நினைக்கிறேன். அ.தி.மு.க.வினரின் ஆசையை இது ஓரளவுக்கு ஈடுசெய்யும் என்று நம்புகிறேன்.
ஜெயலலிதா, 234 தொகுதிகளிலும் கடந்த முறை இரட்டை இலையை மலரச் செய்தார். நாங்கள் 185 தொகுதிகளிலாவது வெற்றி பெற தொண்டர்கள் மத்தியில் ஒரு எழுச்சியை ஏற்படுத்தி இருப்பதாக நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.