

வேலூர்,
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி பஷிராபாத் பகுதியை சேர்ந்தவர்கள் கபீர்அஹமத், இர்பான்அஹமத். இருவரும் நண்பர்கள். கபீர்அஹமத் கத்தார் நாட்டில் குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இர்பான்அஹமத் திருமணமாகி வேலையில்லாமல் வாணியம்பாடியில் இருந்துள்ளார். இதனால் கபீர்அஹமத்திடம் அந்நாட்டில் வேலை வாங்கி தர கேட்டுள்ளார். அதற்கு கபீர்அஹமத்திடம் 3 மாதத்திற்கான சுற்றுலா விசாவை இர்பான்அஹமத்திற்கு அனுப்பி வைத்தார். அதன்படி இர்பான்அஹமத் கத்தார் நாட்டுக்கு வேலை தேடி சென்றார். அங்கே கபீர்அஹமத் வீட்டில் தங்கி இருந்து வேலை தேடி வந்தார்.
இந்த நிலையில் கபீர்அஹமத் மனைவியுடன் இர்பான்அஹமத் தகாத உறவு வைத்ததாக கூறப்படுகிறது. இத்தகைய குற்றங்களை செய்பவர்களுக்கு அந்த நாட்டில் கடுமையான தண்டனை விதிக்கப்படுவதால், கபீர்அஹமத் தன் மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக்கொண்டு நண்பர் இர்பான்அஹமதுவுடன் இந்தியா வந்தார்.
நண்பனின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த இர்பான்அஹமத் மும்பை வந்து இறங்கியவுடன் தலைமறைவானார். பின்னர் கபீர்அஹமத் வாணியம்பாடி வந்து இர்பான்அஹமத் வீட்டிற்கு சென்று கத்தார் நாட்டில் நடந்ததை கூறி, அவரை தன்னிடம் ஒப்படைக்க வலியுறுத்தி உள்ளார். அதன்பேரில் உறவினர்கள் இர்பானை கபீர்அஹமத்திடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து இர்பான்அஹமதுவை ஒருநாள் முழுவதும் கபீர்அஹமத் தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டிற்கு அழைத்து சென்று இர்பான் அஹமதுவின் மனைவியின் கையால் அவரை செருப்பால் அடிக்க வைத்துள்ளார். அப்போது அந்த காட்சியை செல்போனில் படம் பிடித்த கபீர்அஹமத், இவர் பெண்களிடமும் தவறாக நடக்க கூடியவர் என்று சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார்.
இச்சம்பவம் குறித்து இர்பான்அஹமத் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், வாணியம்பாடி போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.