

சென்னை,
குட்கா ஊழலை மூடி மறைப்பதற்காக கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஏராளமான நடவடிக்கைகளை அ.தி.மு.க. அரசு மேற்கொண்டு வரும் போதிலும் அவற்றை நீதிமன்றங்கள் முறியடித்து வருகின்றன. குட்கா ஊழல் வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் அதற்காக கூறியுள்ள காரணங்கள் முக்கியமானவை.
குட்கா ஊழலில் தமிழக அமைச்சர் ஒருவருக்கும், காவல்துறை உயரதிகாரிகள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் நிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிப்பது தான் முறையாக இருக்கும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றத்தின் இத்தகைய கருத்துக்குப் பிறகும் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் அட்டைப் பூச்சியைப் போல பதவியில் ஒட்டிக் கொண்டிருப்பதும், அதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அனுமதித்துக் கொண்டிருப்பதும் வெட்கக்கேடானது. இந்த அவலம் தொடரக்கூடாது.
குட்கா ஊழலில் அமைச்சருக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவரை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும். இந்த வழக்கில் சி.பி.ஐ. அமைப்பு இனியும் தாமதிக்காமல் விசாரணையை தொடங்க வேண்டும். குட்கா நிறுவனங்களிடம் இருந்து அமைச்சர் விஜயபாஸ்கர் கையூட்டு பெற்றதற்கான ஆதாரங்கள் இருக்கும் நிலையில், அவரை கைது செய்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவு முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.