வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது

தனியார் பால் நிறுவன உரிமையாளரிடம் ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.
வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி கைது
Published on

அடையாறு,

ஈரோட்டை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (வயது 55), பால் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் தனியார் வங்கியில் ரூ.50 கோடி கடன் பெற்றுத்தருவதாக கூறிய 3 பேர், அதற்கு தங்களுக்கு ரூ.1 கோடி கமிஷன் தரவேண்டும் என்றனர். இதை நம்பிய அவர் ரூ.1 கோடியுடன் கடந்த 16-ந் தேதி சென்னை பட்டினப்பாக்கம் கற்பகம் அவென்யூவில் உள்ள ஒரு விடுதிக்கு வந்தார்.

அங்கு அவரை ஏமாற்றி ரூ.1 கோடியை அந்த நபர்கள் பறித்துச் சென்றுவிட்டனர். இதுகுறித்து மோகனசுந்தரம் அளித்த புகாரின்பேரில் பட்டினப்பாக்கம் போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடிவந்தனர். மோசடி கும்பலுக்கு கார் ஓட்டிச்சென்ற சென்னை கொரட்டூரை சேர்ந்த ஜெயகுமார் என்ற டிரைவரை கடந்த 22-ந் தேதி போலீசார் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளி கைது

இந்தநிலையில் மயிலாப்பூர் உதவி கமிஷனர் விஸ்வேஷ்வரய்யா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் முருகன், தேவராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் மயிலாப்பூர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த ரசூல்கான் (37) என்பவரை மயிலாப்பூர் ரெயில் நிலையம் அருகே போலீசார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர். அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், இந்த மோசடியில் ஒரு பெரிய கும்பலே ஈடுபட்டது தெரிந்தது. ரசூல்கான் தலைமையில் சென்னையை சேர்ந்த பிரகாஷ் என்கிற காந்திலால், கொளத்தூரை சேர்ந்த நந்தகோபால் ஆகியோர் பணத்தை பறித்துச்சென்றனர். இந்த கும்பலில் மேலும் ஜெயவீரன், நாகூரான், சித்திக், எறையான், காந்திலாலின் மகன் மகாராஜ் ஜெய்ன் ஆகியோரும் உள்ளனர்.

இவர்கள் 4 அணியாக பிரிந்து ஒவ்வொரு வேலையில் ஈடுபட்டுள்ளனர். ராம்குமார் தான் வங்கிகளில் கடன்கேட்டு கிடைக்காதவர்களின் விவரங்களை சேகரித்து இந்த கும்பலுக்கு தெரியப்படுத்துவார். மோகனசுந்தரம் பற்றிய விவரங்களையும் இவர் தான் இந்த கும்பலுக்கு கொடுத்துள்ளார்.

குறைந்த வட்டி

அதைவைத்து மோகனசுந்தரத்தை தொடர்புகொண்ட ரசூல்கான், காந்திலால் மற்றும் நந்தகோபால் ஆகியோர் குறைந்த வட்டியில் விரைவாக வங்கிக்கடன் பெற்றுத்தருவதாக ஆசைவார்த்தை கூறி ஏமாற்றினர். கடன் விவரம் குறித்து பேசுவதற்கும், சில ஆவணங்கள் பெறுவதற்கும் மோகனசுந்தரத்தை 3 முறை சந்தித்த இந்த கும்பல், பின்னர் அவரது கடன் விண்ணப்பத்துக்கு ஒப்புதல் கிடைத்துவிட்டதாக கூறி தங்களின் கமிஷன் தொகை ரூ.1 கோடியுடன் சென்னை வருமாறு கூறினர்.

கடந்த 16-ந் தேதி மோசடி கும்பல் பட்டினப்பாக்கம் பகுதியில் வெவ்வேறு இடங்களில் தனித்தனியாக காத்திருந்தனர். பணத்துடன் வந்த மோகனசுந்தரத்தை ஒரு தனியார் விடுதியில் சந்தித்த ரசூல்கான், காந்திலால், நந்தகோபால் ஆகியோர் மோகனசுந்தரம் கழிவறைக்கு சென்றபோது ரூ.1 கோடி இருந்த பையை எடுத்துக்கொண்டு காரில் ஏறி தப்பிச்சென்றனர்.

ரூ.50 லட்சம் பறிமுதல்

ரூ.1 கோடியை அவர்கள் 3 பேர் மற்றும் ராம்குமார் ஆகியோர் தலா 25 லட்சம் என பிரித்து எடுத்துக்கொண்டனர். கார் டிரைவர் ஜெயகுமார் போலீசிடம் பிடிபட்டதால், பயந்துபோன நந்தகோபால் தனது பங்கு ரூ.25 லட்சத்தையும் ரசூல்கானிடம் கொடுத்துவிட்டு தலைமறைவாகிவிட்டார்.

தற்போது ரசூல்கானிடம் இருந்த ரூ.50 லட்சத்தை பறிமுதல் செய்த போலீசார், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்பட்டு, பணம் மீட்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கில் திறமையாக துப்புதுலக்கி முக்கிய குற்றவாளியை விரைந்து கைது செய்த தனிப்படை போலீசாரை மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகனன் நேரில் அழைத்து பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com