மேகதாது அணை விவகாரத்தில் வலியுறுத்தியது என்ன? கட்சி தலைவர்கள் பேட்டி

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் வலியுறுத்தப்பட்ட கருத்துகள் குறித்து அக்கட்சியின் தலைவர்கள் விளக்கி கூறினர்.
மேகதாது அணை விவகாரத்தில் வலியுறுத்தியது என்ன? கட்சி தலைவர்கள் பேட்டி
Published on

சென்னை,

மேகதாது அணை பிரச்சினை குறித்து நேற்று நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற கட்சிகளான 13 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

இந்தக்கூட்டத்தில் ஒவ்வொரு கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் குறித்து கட்சியின் தலைவர்கள் பேட்டி அளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார்:- காவிரி தமிழகத்தின் வாழ்வாதாராம். காவிரி பிரச்சினையை பொறுத்தமட்டில் தமிழகத்தின் உரிமையை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுக்க முடியாது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கின்ற ஆக்கப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளுக்கும் அ.தி.மு.க.வின் ஆதரவு எப்போதும் உண்டு.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:- மேகதாதுவில் அணை கட்டுவது என்பது தர்மத்துக்கு புறம்பானது. சட்டத்துக்கு புறம்பானது. காவிரி மீது கர்நாடகாவுக்கு உள்ள அதே உரிமை தமிழகத்துக்கும் உள்ளது. மேகதாதுவில் அணை கட்டும் பணியை கர்நாடக அரசு மேற்கொண்டால் சட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.

தமிழக பா.ஜ.க. துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன்:- தமிழக விவசாயிகளின் நலன் கருதி மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கின்ற அனைத்து முயற்சிகளுக்கும் தமிழக பா.ஜ.க. துணையாக இருக்கும். கர்நாடகாவில் பா.ஜ.க. அரசு அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தாலும் தமிழகத்தின் நலன் பாதிக்கப்படும் போது தமிழக பா.ஜ.க. அதை அனுமதிக்காது. இதுகுறித்து பிரதமரிடமும் வலியுறுத்துவோம்.

ம.தி.மு.க. சட்டமன்ற கட்சி துணை தலைவர் சின்னப்பா எம்.எல்.ஏ.:- மேகதாது அணை திட்டம் என்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது. இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் எடுக்கும் நடவடிக்கையை ஒட்டுமொத்த தமிழக மக்களும் ஆதரிக்கிறார்கள்.

பா.ம.க. மாநில தலைவர்ஜி.கே.மணி எம்.எல்.ஏ.:- மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும். மேகதாது அணை திட்டத்துக்கு என தனியாக வழக்கு எதுவும் தொடரப்படவில்லை. எனவே, தனியாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். அது, செல்லாது என்று அறிவிக்க வேண்டும்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்:- மேகதாது அணை விவகாரத்தில் தமிழக எம்.பி.க்கள் ஒன்றிணைந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். தமிழக அரசின் அத்தனை நடவடிக்கைகளுக்கும் துணையாக இருப்போம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்:- குடிநீர் பிரச்சினையை காரணம் காட்டி தமிழகத்தை பாலைவனமாக்கும் முயற்சியில் கர்நாடக அரசு இறங்கி இருக்கிறது. சுப்ரீம் கோர்ட்டு, காவிரி மேம்பாட்டு ஆணையம், பசுமை தீர்ப்பாயம் போன்றவற்றின் மூலம் சட்ட போராட்டம் நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன்:- கர்நாடக அரசின் முயற்சிக்கு மத்திய அரசு துணை போகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டியது கட்டாயம். மத்திய அரசு சார்பு நிலை மேற்கொள்ளாமல் நடுநிலையோடு இருக்க வேண்டும். இது தேசத்தின் ஒற்றுமை சம்பந்தப்பட்ட பிரச்சினை என்பதையும் மத்திய அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்:- மேகதாது விவகாரத்தில் சரியான நேரத்தில் சரியான முடிவை எடுத்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எம்.எல்.ஏ.:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறி அணை கட்டுவோம் என்று எடியூரப்பா கூறுகிறார். யார் அவருக்கு தைரியம் கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து பதிலடி கொடுக்க வேண்டும்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ.:- மேகதாது அணை திட்டம் நிறைவேற்றப்பட்டால் காவிரி டெல்டா பகுதிகளின் விவசாயிகள் பாதிக்கப்படுவர். காவிரி டெல்டா பகுதி வறண்டு போகும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com