கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு

தேனி கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.
கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்த ஆர்ப்பாட்டங்களால் பரபரப்பு
Published on

குறைதீர்க்கும் கூட்டம்

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார். கூட்டத்தில் மொத்தம் 357 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் 3 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.65 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் முரளிதரன் வழங்கினார்.

கூட்டம் தொடங்கும் முன்பு, மனு கொடுக்க வந்த பொதுமக்கள் கூட்டரங்குக்கு வெளியே 1 மணி நேரத்திற்கும் மேலாக சமூக இடைவெளியின்றி தரையில் அமர்ந்திருந்தனர். இதற்கிடையே தேனி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரை சாலை, பெரியகுளம் சாலை ஆகிய இடங்களில் ரெயில் பாதை பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

குடும்பத்துடன் தர்ணா

கந்துவட்டிக்கு பணம் கொடுக்கும் நபர்களுக்கு ஆதரவாக போடி போலீஸ் அதிகாரி ஒருவர் செயல்படுவதாக கூறி தமிழ்நாடு மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மொட்டனூத்து ஊராட்சி ராமச்சந்திராபுரம் கிராமத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். தங்கள் கிராமத்தில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தக்கோரி அவர்கள் இந்த ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதுபோல், பெரம்பலூர் மாவட்டம் பாடாலூரில் நடந்த திருவிழாவில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாகவும், போலீஸ் துறையை கண்டித்தும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அடுத்தடுத்து நடந்த ஆர்ப்பாட்டங்களால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சீலையம்பட்டியை சேர்ந்த ஆயிஷா என்பவர் தனது மகள், பேரன், பேத்திகளுடன் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டரின் கார் முன்பு அமர்ந்து தர்ணா செய்தார். தனது கணவரை கஞ்சா விற்றதாக சின்னமனூர் போலீசார் பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்ததோடு, குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளதாகவும், இதற்கு நீதி வேண்டும் என்று கூறியும் அவர் தர்ணா செய்தார். அவரிடம் கலெக்டர் முரளிதரன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com