

சென்னை,
கஜா புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் போன்ற கடலோர மாவட்டங்களில் முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வுத்துறையால் பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் 1,386 மருத்துவ முகாம்களின் மூலம் 84 ஆயிரத்து 436 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகளில் 600-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், செவிலியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நோய் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தவும், புகை மருந்து அடிக்கவும், கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் பொது சுகாதாரத்துறை இணைந்து செயலாற்றி வருகிறது. தண்ணீர் வடிந்த இடங்களில் பிளச்சிங் பவுடர், கிருமி நாசினி தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக 200 டன் பிளச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை தூய்மைப்படுத்த ஏதுவாக 40 ஆயிரம் லிட்டர் திரவ நிலை குளோரின் தருவிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.