மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11,693 பேர் விண்ணப்பம்

நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11,693 பேர் விண்ணப்பம் செய்து உள்ளதாக வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா கூறினார்.
மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11,693 பேர் விண்ணப்பம்
Published on

ஆய்வுக்கூட்டம்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் குறித்து அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் ஸ்ரேயாசிங் முன்னிலை வகித்தார். வாக்காளர் பட்டியல் பார்வையாளர் சிவசண்முகராஜா தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 9.11.2022 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. அதன் தொடர்ச்சியாக 9.11.2022 முதல் 8.12.2022 வரை சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 9.11.2022 முதல் 24.11.2022 வரை சேர்க்கை விண்ணப்பங்கள் (படிவம்-6) 11,693, நீக்கல் விண்ணப்பங்கள் (படிவம்-7) 2,995 மற்றும் திருத்தம், இடமாற்றம் (படிவம்-8) 6,840 என மொத்தம் 21,528 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளன. பெறப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த விவரங்கள் நாமக்கல் மாவட்ட தேர்தல் அலுவலக இணையதளமான namakkal.nic.in -ல் வெளியிடப்பட்டு உள்ளது. ஆட்சேபணை உள்ளவர்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் தெரிவிக்கலாம்.

சிறப்பு முகாம்

இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. அந்நாட்களிலும் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம். போதுமான அளவு விண்ணப்பங்கள் அனைத்து வாக்குச் சாவடி மையங்களிலும் இருப்பு வைத்து வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக அந்தந்த வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள் அல்லது தாசில்தார் அலுவலகங்களுக்கு உடனே சென்று தங்களை பதிவு செய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, உதவி கலெக்டர்கள் மஞ்சுளா, கவுசல்யா, அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com