

பூந்தமல்லி,
திருவள்ளூர் மத்திய மாவட்ட அ.ம.மு.க. சார்பில் அ.தி.மு.க., பா.ம.க., தே.மு.தி.க., ரஜினி மக்கள் மன்றம் ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் அ.ம.மு.க.வில் இணையும் விழா வேலப்பன்சாவடியில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் லக்கி முருகன் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் மாற்று கட்சிகளை சேர்ந்த 2 ஆயிரம் பேர் அ.ம.மு.க.வில் இணைந்தனர். நிகழ்ச்சியில் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-
ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட ஆட்சியை நடத்திக்கொண்டிருப்பவர்கள் ஜெயலலிதாவையும், அவருடைய கொள்கையையும் மறந்துவிட்டார்கள். அவர் வகுத்து தந்த பாதையை விட்டு கட்சியையும், ஆட்சியையும் வேறு திசையில் அழைத்துச் செல்கிறார்கள். அவர்கள் மத்தியிலே ஆள்பவர்கள் துணையோடு இந்த ஆட்சியையும், கட்சியையும் ஓட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற தேர்தலில் நாம் தோல்வியுற்றதால் இந்த இயக்கம் அழிந்துவிடும் என்று நிர்வாகிகள் சிலர் விலகி செல்கிறார்கள். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தினமும் ஒருவரை தங்கள் கட்சிக்கு இழுக்கின்ற வேலையில் ஈடுபட்டு வருகின்றன. சிலர் இந்த இயக்கத்தை விட்டு சென்றதால் இயக்கத்திற்கு ஏதாவது சேதாரம் இருக்கிறதா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் சுயநலத்திற்காகவே சென்றார்கள்.
உண்மையான தொண்டர்கள் இங்குதான் இருக்கிறார்கள். முன்பு இருந்ததை விட திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்கள் எழுச்சியாக உள்ளது.