கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

கொளத்தூர் தொகுதியில் திட்ட பணிகளை ஆய்வு செய்த மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
Published on

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று, தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று முடிந்திருக்கும் பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பணிகள் குறித்து ஆய்வு செய்தேன். 2017-ம் ஆண்டு மழையின்போது எல்.சி.ஒன். மார்க்கெட் ரோடு பகுதி, குப்பை மேடாகக் காட்சியளித்தது. அப்பகுதியை உடனடியாகச் சுத்தம்செய்ய வேண்டும் என்று நான் எடுத்துச்சொல்லி, அந்தப் பகுதியை சுத்தம் செய்வதற்கு 6 நாட்கள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. அசுத்தமான முந்தைய நிலை இனி தொடரக்கூடாது.

அப்படித் தொடரக்கூடாது என்றால், மாநகராட்சியின் சார்பில் அந்தப் பகுதியில் ஒரு சாலை அமைத்துத் தரவேண்டும் என்று நான் கோரிக்கை வைத்தேன். அதற்காக, அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த தங்கை கனிமொழியின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, அந்தச்சாலை அமைப்பதற்கு நிதி ஒதுக்கித்தரப்பட்டது. ஆனால், அது ரெயில்வேயின் இடமாக இருந்து, அவர்கள் மறுப்பு சொன்ன காரணத்தால், அந்தப் பணியைத் தொடரமுடியாத நிலையில் பாதியில் நின்றுபோனது.

அதற்குப் பிறகு ரெயில்வே மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளராக இருக்கும் கண்ணையா மூலம் ரெயில்வே துறையிடம் இதுகுறித்து விளக்கமாக எடுத்துச்சொல்லி, அவர்களிடத்தில் வலியுறுத்தி, அதற்குப் பிறகு அந்தப் பணி துவங்கப்பட்டிருக்கிறது என்பது உள்ளபடியே பெருமைக்குரிய ஒன்று. அதற்காக, கண்ணையாவுக்கு தொகுதி மக்களின் சார்பில் நான் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அதேபோல், வில்லிவாக்கம் - கொளத்தூர், இவற்றை இணைக்கும் மேம்பாலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நான் கடந்த 2014-ம் ஆண்டு ரெயில்வே துறையின் மந்திரியிடம் எடுத்துச் சொல்லி கடிதம் எழுதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக வலியுறுத்தி அதற்குப் பிறகு அந்தப் பணி துவங்கப்பட்டது.

ரெயில்வே துறையைப் பொறுத்தவரையில் அந்தப் பணியை ஓரளவிற்கு முடித்திருக்கிறார்கள். ஆனால், மாநகராட்சியின் பணிதான் இன்னும் முடிக்கப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அதையும் விரைவில் முடித்துத் தருவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து நிருபர்கள் அவரிடம், நேற்றைய தினம் சென்னைக்கு வந்த பிரதமரின் வருகையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? பிரதமரிடம் தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றைக் கொடுத்ததாகச் சொல்கிறார்களே? என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த மு.க.ஸ்டாலின், கடந்த 8 ஆண்டுகளாக இந்த ஆட்சியானது, பிரதமராக இருந்தாலும் அல்லது அமைச்சர்களாக இருந்தாலும், இவர்கள் மனுக்களை மட்டும்தான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்களே தவிர, அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com