

சென்னை,
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் சர்க்கரை விலையை சமீபத்தில் மாநில அரசு உயர்த்தியது. உணவு பாதுகாப்பு மசோதாவில் மாநில அரசு கையெழுத்திட்டதின் விளைவாலும், மத்திய அரசு மானியம் ஒதுக்காததாலும் சர்க்கரை விலை உயர்ந்தது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள ஏ.ஏ.ஒய் பிரிவினரான 18 லட்சத்து 64 ஆயிரம் பேருக்கு மட்டும் ரேஷனில் ஒரு கிலோ ரூ.13.50 என்ற விலையிலும், மீதமுள்ள 1 கோடியே 75 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.25 என்ற விலையிலும் சர்க்கரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக மற்றொரு பேரிடியை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தர இருக்கிறது என்ற அதிர்ச்சி தகவலை ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பொது வினியோகத்திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். இதுதொடர்பாக ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது:
உணவு பாதுகாப்பு மசோதாவில் மாநில அரசு கையெழுத்திட்டாலும், பொதுவினியோக திட்டம் தங்கு தடையின்றி நடைபெறும் என்று அமைச்சர் கூறினார். அவர் அப்படி கூறினாலும், ரேஷன் கடைகளில் சர்க்கரை வழங்குவதில் பாகுபாடு வந்துவிட்டது. இதே நிலை அடுத்ததாக அரிசி, மண்எண்ணெய், கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்களிலும் ஜனவரி மாதத்தில் இருந்து நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டு இருக்கிறது.
இதனால் பொது வினியோகத்திட்டம் கேள்விக்குறியாவதோடு மட்டுமில்லாமல், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்படும். ஜெயலலிதா உயிரோடு இருந்த போது உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அவர் மறைவுக்கு பிறகு, பொது வினியோக திட்டத்தில் அதிரடி மாற்றங்கள் வரத்தொடங்கி இருக்கிறது.
ரேஷன் கடைகளில் 40 சதவீதம் உளுந்தம் பருப்பு, 60 சதவீதம் துவரம் பருப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், விலை ஏற்றம் மற்றும் சரியான திட்டமிடல் இல்லாமல் உளுந்தம் பருப்பு வினியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக மசூர் பருப்பு வழங்குகிறார்கள். ஆனால் அதை பொதுமக்கள் பலர் வாங்குவதில்லை. இதனை நாங்கள் அதிகாரிகளிடம் கூறினாலும், அவர்கள் கண்டுகொள்வதாக தெரியவில்லை. இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் பொது வினியோக திட்டம் மக்களுக்கு உபயோகம் இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.