தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

தலைமைச் செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் யாகம் நடத்தியது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி
Published on

சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அரவிந்த் ரமேஷ் இல்லத் திருமண நிகழ்ச்சியில் நேற்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர், நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

இன்று காலையில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. விடியற்காலை 3 மணியில் இருந்து விடியற்காலை 5 மணி வரை, ஒரு 2 மணி நேரம் நம்முடைய சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. என்ன சம்பவம் என்று கேட்டால், தமிழ்நாட்டினுடைய துணை முதல்- அமைச்சராக இருக்கக்கூடிய ஓ.பன்னீர்செல்வம் ஒரு யாகத்தை நடத்தி இருக்கிறார்.

எங்கு யாகம் என்றால் கோட்டையில், அவருடைய அறையில் துணை முதல்- அமைச்சருடைய அலுவலகத்தில் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் ஒரு யாகத்தை நடத்தி இருக்கின்றார். இதே ஓ.பன்னீர்செல்வம் தன்னிடத்தில் இருந்த முதல்- அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட உடன் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்டு இருக்கக்கூடிய சமாதிக்குச் சென்று அங்கு தியானம் நடத்தினார். ஆவியோடு பேசினார். அந்தச் செய்திகளை எல்லாம் நீங்கள் பத்திரிகைகளில் தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள்.

அப்படி ஆவிகளோடு அங்கு தியானம் நடத்திய காரணத்தால் ஒருவேளை துணை முதல்-அமைச்சர் பதவி அவருக்கு மீண்டும் கிடைத்திருக்கலாம். அதேபோல் இப்போது எந்தப் பதவிக்காக யாகம் நடத்தி இருக்கிறார் என்று ஒரு கேள்விக்குறி வந்திருக்கின்றது. வேறொன்றுமில்லை, முதல்- அமைச்சர் பதவி காலியாகப் போகின்றது. முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரைவில் சிறைக்குச் செல்லப் போகிறார்.

இது சீக்கிரம் முடித்தால் தான், தான் முதல்-அமைச்சராக முடியும் என்று இந்த யாகத்தை ஓ.பன்னீர்செல்வம் நடத்தியிருக்கின்றார் என நான் பகிரங்கமாக குற்றச்சாட்டை வைக்கின்றேன். ஒன்று முதல்-அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்பட்டு நடத்தியிருக்கலாம், இல்லையென்று சொன்னால் அங்கு இருக்கக்கூடிய கோப்புகளை எரிப்பதற்காக யாகம் நடத்தியிருக்கலாம் என பகிரங்கமாக குற்றச்சாட்டை நான் முன்வைக்கிறேன். இதற்கு கோட்டையில் யாகம் நடத்திய துணை முதலமைச்சருடைய அறையில் யாகம் நடத்திய ஓ.பன்னீர்செல்வம் இதற்குப் பதில் சொல்லியே தீரவேண்டும்.

சென்னையில் நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நான் பேசுகின்றபோது எல்லாக் கட்சித் தலைவர்களையும் வைத்துக்கொண்டு இந்தியாவினுடைய அடுத்தப் பிரதமர் ராகுல்காந்திதான் என்று சொன்னேன். இப்பொழுது நான் மேற்கு வங்கத்திற்குச் சென்று வந்தேன். ஏன் அங்கு ராகுல் பற்றி சொல்லவில்லை என்று கேட்கின்றார்கள். இங்கு நடந்தது தி.மு.க. கூட்டம், அதில் எங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கின்றது. நாங்கள் சொன்னோம், தமிழ்நாட்டு மக்கள் சார்பில் சொன்னோம், தமிழ்நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றார்கள் என்று சொன்னோம். இதில் என்ன தவறு?.

ராகுல்காந்தியை பற்றி நீங்கள் சொன்னது தவறு என்று யாரும் சொல்லவில்லை. அவர் பிரதமர் பதவிக்கு ஏற்றவர் தான் என்று சரத்பவார் சொல்லவில்லையா? இப்படி பல மாநிலத்தில் இருக்கக்கூடிய தலைவர்கள் கருதவில்லையா?. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com