கஜா புயலில் போதிய நிவாரணம் வழங்கவில்லை: தி.மு.க. குற்றச்சாட்டால் சட்டசபையில் காரசார விவாதம்

கஜா புயலில் போதிய நிவாரணம் வழங்கவில்லை என்று தி.மு.க. வைத்த குற்றச்சாட்டால் சட்டசபையில் அமைச்சர்கள் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ. இடையே காரசார விவாதம் நடந்தது.
கஜா புயலில் போதிய நிவாரணம் வழங்கவில்லை: தி.மு.க. குற்றச்சாட்டால் சட்டசபையில் காரசார விவாதம்
Published on

சென்னை,

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ. ரகுபதி (திருமயம்) நேற்று விவாதித்தார். அவர் பேசியபோது அமைச்சர்கள் குறுக்கிட்டு பதிலளித்தனர். அதன் விவரம் வருமாறு:-

ரகுபதி:- பொங்கல் பரிசாக ஏற்கனவே நூறு ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது அது ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறதே தவிர, கவர்னர் உரையில் கூறப்பட்டு இருப்பதுபோல அது புதிய திட்டம் அல்ல.

அமைச்சர் செல்லூர் ராஜூ:- ஏழையின் பாடு ஏழைகளுக்குத்தான் தெரியும். அது உங்களுக்கு எப்படி தெரியும்?

ரகுபதி:- நூறு ரூபாய் என்பது ஆயிரம் ரூபாயாக பண மதிப்பில் உயர்ந்துள்ளது என்பதாக எனது கருத்தை எடுத்து கொள்ளுங்கள். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஆயிரம் ரூபாய் நோட்டு எப்படி செல்லாமல் போனதோ அதுபோலத்தான் கவர்னர் உரை உள்ளது. வெறும் வாய்ச்சவடாலும், வெற்று அறிக்கையும்தான் இந்த அரசின் நிலை. கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய நிவாரணம் வழங்கவில்லை. புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு இன்னும் மின் இணைப்பு தரப்படவில்லை.

அமைச்சர் தங்கமணி:- அந்த மாவட்டத்தில் மட்டும் 6 லட்சம் மின் இணைப்புகள் பாதிக்கப்பட்டன. நகர்ப்பகுதியில் 3 நாட்களிலும், கிராமப் பகுதிகளில் 15 நாட்களிலும் இணைப்புகளை வழங்கினோம். வயல் வெளிப்பகுதிகளில் கம்பம் நடுவதில் சிரமம் உள்ளது. அங்கு 6 ஆயிரம் மின் இணைப்புகள் இன்னும் ஒரு வாரத்தில் வழங்கப்பட்டுவிடும். காவிரி பிரச்சினையில் நிரந்தர தீர்வு, எய்ம்ஸ் மருத்துவமனை, ஜல்லிக்கட்டு சட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தது இந்த அரசுதான். இவையெல்லாம் வெற்று அறிக்கை அல்ல.

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்:- அங்கு நான் முழுமையாக இருந்து நிவாரண பணியில் ஈடுபட்டேன். இதுவரை இல்லாத அளவுக்கு வேகமாக நிவாரண பணிகள் நடந்துள்ளன.

துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்:- கஜா புயல் கரை கடந்து சோமாலியாவுக்கு போய்விட்டது. எனவே நீங்களும் கரை கடந்து கவர்னர் உரை மீது உரையாற்றுங்கள்.

ரகுபதி:- நிவாரண பணிகள் நடந்தால், ஏன் மக்கள் அங்கு போராட்டம் நடத்த வேண்டும்?

அமைச்சர் தங்கமணி:- அந்த போராட்டங்கள் யார் தலைமையில் நடக்கிறது என்பதை இங்கு சொல்ல விரும்பவில்லை. ஆனால் அதற்கு ஆதாரம் உள்ளது. இவ்வளவு வேகமாக நிவாரண பணியை நடத்துகிறார்களே என்பதை உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்:- புயல் வீசிய அன்று நீங்கள் என்ன விழா கொண்டாடினீர்கள் என்பது தெரியும். இயற்கை பேரிடர் நடந்தாலும், நோய் தொற்று ஏற்படாமல் மக்களை காப்பாற்றி இருக்கிறோம்.

அமைச்சர் வேலுமணி:- அரசின் நிவாரண பணிகளை மனசாட்சி உள்ளவர்கள் பாராட்டினார்கள்.

ரகுபதி:- யார் யார் எங்கு சென்றார்கள் என்பது எனக்கும் தெரியும். அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்றாலும்கூட நாங்களும் களத்தில் இருந்து பணியாற்றினோம். திருமயத்தில் என் வீட்டுக்குக்கூட 10 நாட்கள் கழித்து தான் மின்சார இணைப்பு கிடைத்தது. ஆனால் உங்கள் கட்சியினருக்கு 2 நாட்களில் இணைப்பு தரப்பட்டது.

அமைச்சர் தங்கமணி:- மின் இணைப்பை அப்படி குறிப்பிட்ட சிலருக்கென்று இடையில் வழங்க முடியாது.

அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்:- களத்தில் ஆலங்குடி எம்.எல்.ஏ.வை பார்த்தேன். உங்களை (ரகுபதி) பார்க்கவில்லை.

ரகுபதி:- நான் களத்தில் இருந்தேனா, இல்லையா என்பது திருமயம் மக்களுக்கு தெரியும். திருமயத்தில் 42 ஆயிரம் பேரில் 11 ஆயிரம் பேருக்கு மட்டுமே நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. அதனால்தான் போராடுகிறார்கள்.

அமைச்சர் உதயகுமார்:- எங்கு பிரச்சினை இருக்கிறது என்று ஆதாரத்துடன் சொன்னால் அதை உடனே நாங்கள் சரிசெய்வோம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com