

சென்னை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்திய குருப்-4 தேர்வில் மோசடி நடந்திருப்பது அம்பலம் ஆனது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய சி.பி. சி.ஐ.டி. போலீசார் டி.என்.பி.எஸ்.சி. ஆவண குமாஸ்தா ஓம்காந்தன் உள்பட 16 பேரை கைது செய்து உள்ளனர்.
தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியான சென்னை முகப்பேரை சேர்ந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே குரூப்-2ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதி ஆகியுள்ளது. இதைத்தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க போலீசாருக்கு தேர்வாணையம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அந்த தேர்வு தொடர்பான ஆவணங்களையும் போலீஸ் வசம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒப்படைத்து இருக்கிறது
சுமார் 30 க்கும் மேற்பட்டோர் முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாகவும் டி.என்.பி.எஸ்.சி தரப்பில் சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்ற 20 க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களின் தொலைபேசி எண்கள் மூலம் யார் யாரை தொடர்பு கொண்டுள்ளனர், முறைகேடாக தேர்ச்சி பெற்றது எப்படி எவ்வளவு பணம் கைமாறியது என்பன உள்ளிட்ட தகவல்களை சேகரித்து விசாரணையை மேலும் தீவிரப்படுத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.