வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பல கோடி ரூபாயுடன் சிக்கிய கன்டெய்னர் லாரி கலெக்டர் நேரில் ஆய்வு

பல கோடி ரூபாய் எடுத்துச்சென்ற கன்டெய்னர் லாரியை கலெக்டர் நேரில் ஆய்வு செய்தார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் பல கோடி ரூபாயுடன் சிக்கிய கன்டெய்னர் லாரி கலெக்டர் நேரில் ஆய்வு
Published on

அணைக்கட்டு,

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் இன்று (திங்கட்கிழமை) நடைபெற உள்ளதால் தேசிய நெடுஞ்சாலையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பகல் 2 மணிக்கு மைசூருவில் இருந்து சென்னை நோக்கி 2 கன்டெய்னர் லாரிகள் வந்து கொண்டிருந்தன. அந்த லாரிகள் வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா சுங்கச்சாவடியை கடப்பதற்காக மெதுவாக வந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் பின்னால் வேகமாக வந்த ஒரு தனியார் பஸ் கன்டெய்னர் லாரியை முந்தி செல்வதற்காக கடந்து சென்றது.

அப்போது ஒரு கன்டெய்னர் லாரி மீது உரசியதில் லாரியின் வலதுபுறம் இருந்த கண்ணாடி உடைந்து விட்டது. உடனே கன்டெய்னர் லாரியின் டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு தனியார் பஸ் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

கண்டக்டரும் கன்டெய்னர் லாரி டிரைவரை தரக்குறைவாக பேசினார். உடனே லாரியில் இருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் கண்டக்டரை தாக்கிவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பஸ் பயணிகள் கண்டக்டரை தாக்கிய போலீஸ்காரரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சுங்கச்சாவடியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக சென்ற தேர்தல் பார்வையாளர், 2 கன்டெய்னர் லாரிகளில் என்ன இருக்கிறது? என்று அவற்றின் டிரைவர்களிடம் கேட்டார். அதற்கு 2 கன்டெய்னர் லாரிகளிலும் பல கோடி பணம் உள்ளதாக டிரைவர்கள் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த தேர்தல் பார்வையாளர் அதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரத்திடம் கூறினார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கலெக்டர் சண்முகசுந்தரம் கன்டெய்னர் லாரியில் இருந்த துப்பாக்கி ஏந்திய போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

அப்போது உடன் வந்த போலீஸ் அதிகாரி, மைசூரு ரிசர்வ் வங்கியில் இருந்து சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு கன்டெய்னர் லாரிகள் செல்வதாகவும், பல கோடி ரூபாய் அதில் கொண்டு செல்வதாகவும், நாங்கள் பாதுகாப்புக்காக செல்கிறோம் என்றும் கூறினார்.

இதையடுத்து அதற்கான ஆவணங்களை காட்டுமாறு கலெக்டர் கூறினார். அதனை கலெக்டர் வாங்கி ஆய்வு செய்தபோது அவை சரியாக இருந்ததால் 2 கன்டெய்னர் லாரிகளையும் அனுப்பிவைத்தார்.

இதனிடையே 2 கன்டெய்னர் லாரி முழுவதும் பணம் இருந்த தகவல் காட்டுத்தீ போல் பரவியதால் பொதுமக்கள் அங்கு குவிந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com