தேனி மாவட்டத்தில்கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து

தேனி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேனி மாவட்டத்தில்கள்ளச்சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலீசார் தீவிர ரோந்து
Published on

கள்ளச்சாராயம்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்த பலர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. போலீஸ் அதிகாரிகள் பலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கொரோனா வைரஸ் பரவலின் போது மதுக்கடைகள் மூடப்பட்டதால் பல இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டது. அவ்வாறு காய்ச்சிய பலரை போலீசார் கைது செய்தனர்.

பழைய குற்றவாளிகள்

தற்போது விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயத்தால் நேர்ந்த உயிரிழப்புகளை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும், சாராய வழக்குகளில் தொடர்புடைய பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.

அதன்பேரில், கடமலை-மயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட வருசநாடு, கடமலைக்குண்டு உள்ளிட்ட மலையடிவார பகுதிகளிலும், மலைக்கிராமங்களிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளில் உள்ள மலையடிவார பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மலைப்பகுதிகளில் கள்ளச்சாராய ஊறல் ஏதும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று தேடுதல் வேட்டை நடத்த நக்சல் தடுப்பு பிரிவினரும் இந்த கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மலையடிவார கிராமப்புற பகுதிகளில் திருவிழாக்கள் நடக்கும் இடங்களில் கூடுதல் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

போலீசாரையும் கண்காணிக்க...

இந்த தேடுதல் வேட்டையில், இதுவரை கள்ளச்சாராயம் காய்ச்சியதாக யாரும் பிடிபடவில்லை. இந்த தேடுதல் வேட்டை ஒருபுறம் இருக்க, பழைய குற்றவாளிகளின் செல்போன் எண்களை ஆய்வுக்கு உட்படுத்தி, அவர்களுடன் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் இதர போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீசார் யாரும் தொடர்பில் இருக்கிறார்களா? என்று கண்காணிக்கவும் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com