

திருவொற்றியூர்,
137 ஆண்டுகள் பழமைவாய்ந்த சென்னை துறைமுகத்தில் ஆண்டுக்கு 5.5 கோடி மெட்ரிக் டன் சரக்குகள் மற்றும் 15 லட்சம் சரக்கு பெட்டகங்கள் கையாளப்படுகின்றன. இதற்காக தினமும் 4 ஆயிரம் கன்டெய்னர் லாரிகள் துறைமுகத்திற்கு சென்றுவருகிறது. ஆவணங்களை சரிபார்த்து துறைமுகத்துக்குள் செல்வது தாமதமாவதால் சாலையோரம் லாரிகள் வரிசையாக நிறுத்தப்படுவது வழக்கம். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தினமும் அவதிப்பட்டு வந்தனர்.
போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திருவொற்றியூர்-எண்ணூர் விரைவு சாலையில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் 2013-ம் ஆண்டு 13.26 ஏக்கரில் சென்னை துறைமுகம் சார்பில் வாகன நிறுத்தம் திறக்கப்பட்டது. ஆனால் போதிய வசதி இல்லாததால் அடுத்த சில மாதங்களில் இந்த வாகன நிறுத்தம் மூடப்பட்டது.
இந்நிலையில் இதனை சுங்கத்துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து சரக்குப் பெட்டக நிலையமாகவும், ஆவண சரிபார்ப்பு மையமாகவும் மாற்றுவதுடன் புதிய வசதிகளை ஏற்படுத்துவது என முடிவு செய்து சுங்கத்துறை ஆணை பிறப்பித்தது. அதன்படி இப்போது அந்த பகுதி சரக்கு பெட்டக நிலையம் மற்றும் ஆவண சரிபார்ப்பு மையமாக மாற்றப்பட்டது.
இதன்மூலம் போக்குவரத்து நெரிசலை தீர்க்க தொடங்கப்பட்ட முக்கிய திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. சரக்கு பெட்டக ஆவண சரிபார்ப்பு மையத்தை சென்னை மண்டல சுங்கத்துறை முதன்மை ஆணையர் அஜித்குமார், மத்திய கிடங்கு நிறுவன மேலாண் இயக்குனர் அருண்குமார், மத்திய சேமிப்பு கிடங்கு கழகத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்சவா உள்ளிட்டோர் தொடங்கிவைத்தனர்.
பின்னர் மத்திய சேமிப்பு கிடங்கு நிர்வாக இயக்குனர் ஸ்ரீவத்சவா நிருபர்களிடம் கூறும்போது, நேரடி துறைமுக நுழைவுவசதி மையம் தொடங்கப்பட்டதால் லாரி ஓட்டுநர்களின் நலன் அதிக அளவு பாதுகாக்கப்படுகிறது. கன்டெய்னர் லாரி ஓட்டுநர்கள் அதிக நேரம் சாலைகளில் காத்திருப்பது தடுக்கப்படுகிறது. ஆவண சரிபார்ப்பு மையம் திறக்கப்பட்டதன் மூலம் சென்னை துறைமுகத்திற்கு 2 மணி முதல் 5 மணி நேரத்திற்குள் சரக்குகள் சென்றடைய வழிவகுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டுனர்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தங்குமிடம், கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இங்கு செய்யப்பட்டு உள்ளதால் ஓட்டுனர்கள் தாங்களாகவே விரும்பி இங்கு வாகனங்களை நிறுத்துவார்கள். ஒரே நேரத்தில் 5 ஆயிரம் லாரிகள் நிறுத்த வசதி உள்ளதால் சாலைகளில் லாரிகளின் தேக்கமின்றி போக்குவரத்து நெரிசல் குறையும் என்றார்.
சுங்கத்துறை முதன்மை ஆணையர் அஜித்குமார் கூறும்போது, நேரடி துறைமுக நுழைவு வசதி மூலம் சுங்கத்துறை பணிகள் அனைத்தும் வெகுவிரைவாக சரிபார்க்கப்பட்டு ஏற்றுமதி-இறக்குமதி பணிகள் விரைவாக நடைபெறும். இதன்மூலம் நேரமும் பணமும் சேமிக்கப்படுகிறது. இதனால் சென்னை துறைமுகத்தின் தரம் உயரும் என்றார்.