திருவாரூரில், கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு

திருவாரூரில், கடந்த மாதம் பெய்த மழையால் வைக்கோல் கட்டுகள் நனைந்து வீணாகியது. இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
திருவாரூரில், கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு
Published on

திருவாரூரில், கடந்த மாதம் பெய்த மழையால் வைக்கோல் கட்டுகள் நனைந்து வீணாகியது. இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

கால்நடை வளர்ப்பு

திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இது தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். மாடுகளை வளர்த்து பால் விற்பனை, ஆடுகளை இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர். ஆடு, மாடுகளுக்கு தீவனத்துக்கு அதிக செலவுகள் இருக்கும்.

அவைகளுக்கு பசுந்தீவனம், அடர் தீவனம் மட்டுமின்றி உலர் தீவனமும் கொடுக்க வேண்டியதுள்ளது. இதற்காகவே அறுவடை செய்யும் காலத்தில் கிடைக்கும் சோளத்தட்டை, வைக்கோல் போன்றவற்றை வாங்கியும், தங்களின் வயலில் கிடைப்பதை இருப்பு வைத்து தீவனமாக பயன்படுத்துவார்கள்.

தற்போது உலர் தீவனத்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் வைக்கோல்களை வெளியில் இருந்து தான் வாங்கி பயன்படுத்துகிறார்கள்.

வைக்கோல் வீணாகியது

கடந்த மாதம் (பிப்ரவரி) தமிழகத்தில் திருவாரூர் மட்டுமின்றி, டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து 2 நாட்களாக விட்டு, விட்டு மழை பெய்வதும், வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுமாக இருந்து வந்தது. இதில் திடீரென பெய்த மழையால் மாவட்டம் முழுவதும் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது.

மேலும் மழையால் திருவாரூர் மாவட்டத்தில் அறுவடை செய்யப்பட்ட வயல்பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இதனால் வைக்கோல் மழையில் நனைந்து பெருமளவு வீணாகி விட்டது.

எனவே அதிக அளவில் வைக்கோல் கட்டுகளை இருப்பு வைக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் கால்நடைகளுக்கு வைக்கோல் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.

தீவன தட்டுப்பாடு

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அறுவடை பணி நடந்துவந்தது. இந்த நிலையில் மழை காரணமாக நெற்பயிர்கள் வயலில் சாய்ந்தன. அறுவடை செய்யப்பட்ட வயல்களில் வைக்கோல்கள் தேங்கி மழையில் நனைந்து வீணாகி விட்டது. பெரும்பாலானோர் கால்நடைகள் வளர்த்து வருகின்றனா. மழைக்காலங்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதில்லை. அந்த நேரங்களில் தற்போது சேமித்து வைக்கும் வைக்கோல்கள் தான் உணவுக்கு வழங்கி வருகிறோம். தங்கள் கால்நடைகளுக்கே உணவுக்கு வைக்கோல் இல்லாத நிலையில் வெளியூருக்கு அனுப்ப முடியவில்லை. கடந்த மாதம் பெய்த மழையால் தான் பெருமளவு வைக்கோல் நனைந்து சேதமாகிவிட்டது.

டயர் அறுவடை எந்திரம் அறுவடை செய்தால் அதிக அளவில் வைக்கோல் கிடைக்கும். ஆனால் வயலில் ஈரப்பதம் காரணமாக சங்கிலி அறுவடை எந்திரம் மூலம் அறுவடை செய்தால் வைக்கோல் கிடைப்பது இல்லை என்றனர். இதனால் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com