தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் பணியின் போது சட்டையில் அணியும் 72 நவீன கேமராக்கள் வினியோகம்

தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் பணியின்போது சட்டையில் அணியும் 72 நவீன கேமராக்களை போலீஸ் சூப்பரண்டு பாலாஜி சரவணன் வினியோகம் செய்தார்.
Published on

தூத்துக்குடி மாவட்டத்தில் பணியின்போது போலீசார் சட்டையில் அணியும் 72 நவீன கேமராக்களை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் நேற்று வழங்கினார்.

நவீன கேமரா

தமிழக அரசு போலீசாரின் பயன்பாட்டுக்கென சட்டையில் அணியக்கூடிய நவீன ரக கேமரா மற்றும் சேமிப்பு கருவியை வழங்கி வருகிறது. அதன்படி ஏற்கனவே முதல் கட்டமாக நவீன கேமராக்கள் வழங்கப்பட்டன. தற்போது மீண்டும் தமிழக அரசு ரூ.7 லட்சத்து 65 ஆயிரத்து 432 மதிப்பிலான 72 புதிய நவீன ரக கேமராக்கள் மற்றும் சேமிப்பு கருவியை வழங்கி உள்ளது. இந்த கேமராக்களை போலீசார், தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவர்கள் தங்களது பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை வீடியோ, ஆடியோ, புகைப்படம் ஆகியவற்றில் பதிவு செய்யவும், பதிவு செய்தவற்றை சேமிக்கும் வசதியும் உள்ளது. இதனை போலீசார் வாகன சோதனை, ரோந்து செல்லுதல், போக்குவரத்து சீர் செய்தல் போன்ற போலீசாரின் பல்வேறு வகையான பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இது போலீசாருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கேமராக்கள் வினியோகம்

இந்த நவீன கேமராக்கள் தூத்துக்குடி உட்கோட்டத்திற்கு 15-ம், தூத்துக்குடி ஊரக உட்கோட்டத்திற்கு 6-ம், திருச்செந்தூர் உட்கோட்டத்திற்கு 10-ம், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்டத்திற்கு 8-ம், மணியாச்சி உட்கோட்டத்திற்கு 7-ம், கோவில்பட்டி உட்கோட்டத்திற்கு 11-ம், விளாத்திகுளம் உட்கோட்டத்திற்கு 11-ம், சாத்தான்குளம் உட்கோட்டத்திற்கு 4-ம் ஆக மொத்தம் 72 கேமராக்களை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் வைத்து போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி தொழில்நுட்ப பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமமூர்த்தி, ஆறுமுகம், சங்கர் கணேஷ், போலீஸ் துறை பண்டக பிரிவு அலுவலக கண்காணிப்பாளர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com