தூத்துக்குடியில் 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் டேங்கர் லாரியுடன் பறிமுதல்

தூத்துக்குடியில் 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் டேங்கர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
Published on

தூத்துக்குடியில் குடோனில் பதுக்கிய 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் டேங்கர் லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கலப்பட டீசல்

தூத்துக்குடி மடத்தூர் சிப்காட் பகுதியில் உள்ள தனியார் குடோனில் கலப்பட டீசல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் தலைமையிலான தனிப்படை போலீசார் நேற்று அந்த குடோனுக்கு விரைந்து சென்று திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு பதுக்கி வைத்திருந்த 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசலை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கலப்பட டீசல் கடத்தலுக்கு பயன்படுத்திய டேங்கர் லாரி மற்றும் உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் ஆகும்.

6 பேர் கைது

இதுதொடர்பாக தூத்துக்குடி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த பிரவீன் (வயது 27), தூத்துக்குடி ராஜகோபால் நகரைச் சேர்ந்த பவுல் அந்தோணி (35), குரூஸ்புரத்தைச் சேர்ந்த டேனியல் (44), நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த ராஜகோபால் (42), நெல்லை மேலப்பாளையம் குறிச்சியைச் சேர்ந்த ராமசாமி (30), வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி டிரைவர் புஷ்பராஜ் (27) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான வேலுவை (32) வலைவீசி தேடி வருகின்றனர்.

இதுகுறித்து தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

குறைந்த விலைக்கு...

பெங்களூருவில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் டீசலை எவ்வித ஆவணங்களும் இன்றி திருட்டுத்தனமாக டேங்கர் லாரியில் தூத்துக்குடி குடோனுக்கு கொண்டு வந்துள்ளனர். பின்னர் அந்த டீசலுடன் மண்எண்ணெய் உள்ளிட்டவற்றை கலந்து கலப்பட டீசல் தயாரித்துள்ளனர்.

இதனை லாரிகளுக்கும், சில பெட்ரோல் பங்க்குகளுக்கும், மீன்பிடி படகுகளுக்கும் விற்றுள்ளனர். குடோனில் பெரிய தொழிற்சாலை போன்று அமைத்து கலப்பட டீசலை ஆபத்தான முறையில் கையாண்டுள்ளனர். வெளிச்சந்தையைவிட குறைந்த விலைக்கு கலப்பட டீசலை விற்றதால் அதனை பலரும் வாங்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கடந்த ஆண்டு தூத்துக்குடி முத்தையாபுரத்தில் குடோனில் பதுக்கிய 39 ஆயிரத்து 400 லிட்டர் கலப்பட டீசல் மற்றும் டேங்கர் லாரி, 4 லோடு ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்து, 9 பேரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் 35 ஆயிரம் லிட்டர் கலப்பட டீசல் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com